கிரிக்கெட் போட்டி துவங்கும் முன் தேசிய கீதம் இசைக்கப்பட்டபோது ஜம்மு காஷ்மீரைச் சேர்ந்த வீரர் பர்வேஷ் ரசூல் சுவிங்கம் மென்றுகொண்டிருந்தது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
இந்தியா – இங்கிலாந்து இடையே 3 ஒருநாள் போட்டி மற்றும்
3 டி-20 போட்டிகள் நடைபெற்று வருகின்றன. ஒருநாள் கிரிக்கெட் தொடரை இந்திய அணி, 2-1 என கைப்பற்றியது. தொடர்ந்து டி 20 போட்டிகள் நடைபெற்று வருகின்றன.
இதன் முதல் போட்டி நேற்று கான்பூரில் நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, பேட்ஸ்மேன்கள் அனைவரும் சொற்ப ரன்னில் ஆட்டமிழக்க, 20 ஓவரில் இந்திய அணி, 7 விக்கெட்டுக்கு 147 ரன்களே எடுத்தது. அடுத்து களத்துக்கு வந்த இங்கிலாந்து அணி, அடித்து ஆடி, 18.1 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 148 ரன்கள் எடுத்து 7விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
போட்டி தொடங்குமுன் தேசிய கீதம் இசைக்கப்பட்டது. அப்போது இந்திய கிரிக்கெட் வீரர்கள் அனைவரும் தேசிய கீதத்தைப் பாடினர். ஆனால் ஜம்மு காஷ்மீரைச் சேர்ந்த பர்வேஷ் ரசூல் தேசிய கீதத்தைப் பாடாமல் சுவிங்கம் மென்று கொண்டிருந்தார்.
இதனால் அதிருப்தி அடைந்த இந்திய ரசிகர்கள், “பர்வேஷ் ரசூல், தேசிய கீதத்தை அவமதித்துவிட்டார். அவரை உடனடியாக அணியை விட்டு வெளியேற்ற வேண்டும்” என்று குரல் எழுப்பி வருகிறார்கள்.