சென்னை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொகுதியான சென்னை  கொளத்தூர் தொகுதியில் புதிய வருவாய் வட்டம் உருவாக்கம் செய்யப்பட்டு உள்ளதாக தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

அதன்படி,  3 வருவாய் கிராமங்களை உள்ளடக்கி கொளத்தூரை தலைமையிடமாக கொண்டு புதிய கொளத்தூர் வருவாய் வட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இதுவரை அயனாவரம் வட்டத்தில் கொளத்தூர் இருந்து வந்த நிலையில், தற்போது கொளத்தூரை தலைமையிடமாக கொண்டு புதிய வட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.

இது குறித்து வருவாய்த் துறை செயலர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  தமிழக அரசுக்கு வருவாய் நிர்வாக ஆணையர் எழுதிய கடிதத்தில், சென்னை மாவட்டம், மத்திய வருவாய் கோட்டத்தில் உள்ள அயனாவரம் வருவாய் வட்டத்தை சீரமைத்து கொளத்தூர் எனும் புதிய வருவாய் வட்டம் (தாலுகா) உருவாக்குவது குறித்து சென்னை மாவட்ட ஆட்சியரின் கருத்துரு பரிசீலிக்கப்பட்டது.

அதில், ‘அயனாவரம் வட்டத்தில் உள்ள பொதுமக்களுக்கு அரசின் சேவைகள் எளிதாகவும், விரைவாகவும் சென்றடைய ஏதுவாக, புதிய வட்டம் உருவாக்க வேண்டும் என்றும், அயனாவரம் வட்டத்தில் உள்ள 8 வருவாய் கிராமங்களில் 5 கிராமங்களை அயனாவரம் வட்டத்திலேயே தொடர்ந்து இருத்தி வைத்து, மீதமுள்ள 3 வருவாய் கிராமங்களில் கொளத்தூர் கிராமத்தை கொண்டு கொளத்தூர் குறுவட்டம், சிறுவள்ளூர், பெரவள்ளூர் ஆகிய 2 வருவாய் கிராமங்களை கொண்டு பெரவள்ளூர் குறுவட்டத்தையும் உள்ளடக்கி கொளத்தூரை தலைமையிடமாக கொண்டு புதிய வருவாய் வட்டம் உருவாக்கலாம்.

மேலும், புதிய வருவாய் வட்டத்துக்கு அனுமதிக்கப்பட வேண்டிய 42 பணியிடங்களில், அயனாவரம் வட்டத்தில் உள்ள மிகை பணியிடங்கள் 7 மற்றும் புதிதாக 35 பணியிடங்கள் உருவாக்கலாம், ஒரு ஓட்டுநர் பணியிடமும் தோற்றுவிக்கலாம்’ என்றும் தெரிவித்துள்ளார். எனவே, அயனாவரம் வருவாய் வட்டத்தை மறுசீரமைத்து கொளத்தூரை தலைமையிடமாக கொண்டு புதிய வருவாய் வட்டம் உருவாக்கலாம்’ என்று தனது கடிதத்தில் வருவாய் நிர்வாக ஆணையர் பரிந்துரைத்தார்.

மாவட்ட ஆட்சியர் கருத்துரு, வருவாய் நிர்வாக ஆணையரின் கடிதம் ஆகியவற்றை கவனமாக பரிசீலித்த தமிழக அரசு, கொளத்தூர், பெரவள்ளூர், சிறுவள்ளூர் ஆகிய 3 வருவாய் கிராமங்களை உள்ளடக்கி கொளத்தூரை தலைமையிடமாக கொண்டு புதிய கொளத்தூர் வருவாய் வட்டம் உருவாக்கப்படுகிறது.

மேலும், இந்த வருவாய் வட்டத்துக்கு தேவைப்படும் 42 பணியிடங்கள் தோற்றுவிக்கப்படுகிறது. புதிய வருவாய் வட்டத்துக்கு தோராயமாக ஏற்படும் தொடரும் செலவுக்கு ரூ.2.91 கோடியும், தொடரா செலவினம், ரூ.32.22 லட்சமும் ஒதுக்கி உத்தரவிடப்படுகிறது.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.