சென்னை; தமிழ்நாடு உயிரியல் பூங்கா ஆணையத்தின் 21ஆவது ஆட்சிமன்றக் குழுக் கூட்டம் மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் உரையாற்றிய முதல்வர், வன உயிரின பாதுகாப்பில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளதாகவும், உயிரியல் பூங்காவில் உள்ள வன உயிரினங்களுக்கு சாதகமான சூழலை ஏற்படுத்த வேண்டும் என அறிவுறுத்தினார்.
தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று தலைமைச் செயலகத்தில் தமிழ்நாடு உயிரியல் பூங்கா ஆணையத்தின் 21-வது ஆட்சிமன்றக் குழுக் கூட்டம் நடைபெற்றது. இதில் பேசிய முதல்வர், வண்டலூர் உயிரியல் பூங்கா உலகத்தரம் வாய்ந்த பூங்காவில் ஒன்றாக விளங்கி வருகிறது வண்டலூர் உயிரியல் பூங்காவுக்கு ஆண்டுக்கு 20 லட்சம் பேர் வந்து செல்கின்றனர் உயிரியல் பூங்காக்களின் கட்டமைப்புகள் மேம்படுத்தப்படும் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வன உயிரின பூங்காவுக்கு வரக்கூடிய மக்களுக்கு, வன உயிரின பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டும் உயிரியல் பூங்காவில் உள்ள வன உயிரினங்களுக்கு சாதகமான சூழலை ஏற்படுத்த வேண்டும் என அறிவுறுத்தினார்.
இதுகுறித்து தமிழகஅரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், மத்திய உயிரியல் பூங்கா ஆணையத்தின் கீழ் உள்ள 147 பெரிய உயிரியல் பூங்காக்களில் மேலாண்மை, செயல்திறன், மதிப்பீடு ஆகியவற்றின்கீழ் – வண்டலூரில் உள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா, இந்தியாவிலேயே முதல் இடத்தைப் பிடித்துள்ளது என்பதை இங்கே குறிப்பிடுவதில் நான் மிகவும் மகிழ்ச்சியும் பெருமையும் அடைகிறேன். சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறையின் இந்த சாதனைக்காக நான் அத்துறை அதிகாரிகளை வாழ்த்த விரும்புகிறேன்.
மேலும் நமது விலங்குகளுக்கும் பார்வையாளர்களுக்கும் சிறந்த வசதிகளை வழங்குவதற்கான உங்கள் முயற்சிகளைத் தொடர்ந்து நல்குமாறு இத்தருணத்தில் உங்கள் அனைவரையும் அன்போடு கேட்டுக் கொள்கிறேன். கொரோனா நோய்த் தொற்று ஊரடங்கு காலங்களில், அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா மூடப்பட்டதால் பூங்காவிற்கு வருமானம் இல்லாதபோது, உயிரியல் பூங்காவின் பராமரிப்பிற்காக அரசாங்கம் ரூபாய் 6 கோடியை ஒதுக்கியது. உயிரியல் பூங்காவில் உள்ள விலங்குகளைக் கொரோனா தொற்றுநோயிலிருந்து பாதுகாக்க அரசாங்கம் எடுத்த இந்த முன்னெச்சரிக்கை மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் பரவலாகப் பாராட்டப்பட்டன. வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா, உலகத் தரம் வாய்ந்த சில உயிரியல் பூங்காக்களில் ஒன்று.
பூங்காவில் உள்ள விலங்குகளுக்கு, முழுமையான இயற்கைச் சூழலில் வாழ்வதற்கு ஏற்றாற்போல் இந்தப் பூங்கா இயற்கையாகவே அமைந்துள்ளது. வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவிற்கு ஆண்டுக்கு சராசரியாக 20 லட்சம் பார்வையாளர்கள் வந்து செல்கிறார்கள். இயற்கை மற்றும் வனவிலங்கு பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை மக்களிடத்தில் ஏற்படுத்துவதில் உயிரியல் பூங்காக்கள் மிக முக்கிய பங்காற்றுகின்றன. உயிரியல் பூங்காக்கள், விலங்குகளைப் பற்றிய விழிப்புணர்வை மக்களுக்கு வழங்குவதைத் தவிர, அழிந்து வரும் உயிரினங்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்துவதன் மூலம் வனவிலங்குப் பாதுகாப்பில் முக்கிய பங்கு வகிக்கின்றன.
உயிரியல் பூங்காக்கள், ஆதரவற்ற விலங்குகளின் மீட்பு மற்றும் மறுவாழ்வு மையமாகவும் செயல்படுவதன் மூலம் உயிரியல் பூங்காக்கள் வனவிலங்கு பாதுகாப்பில் முக்கிய பங்கு வகிக்கின்றன. வன உயிரினங்களைப் பாதுகாப்பதிலும், மிகவும் பயனுள்ள அறிவியல் ஆய்வுகளுக்கும், உயிரியல் பூங்காக்கள் முக்கியப் பங்காற்றுகின்றன. மேலும் சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை, குறிப்பாக அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா நிர்வாகம் ஆகியோர் பூங்காவின் மேம்பாட்டிற்காக பின்வரும் நடவடிக்கைகளை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்: இயற்கை வளங்களின் சிறந்த மற்றும் அதிகபட்ச பயன்பாட்டை ஒருங்கிணைத்து மத்திய உயிரியல் பூங்கா ஆணைய விதிகளின்படி நீண்ட காலத் திட்டம் ஒன்றை தயாரிக்க வேண்டும். உயிரியல் பூங்காக்களில் உள்ள விலங்குகளுக்கு ஆரோக்கியமான, பாதுகாப்பான, சுகாதாரமான சூழலை உருவாக்குதல் வேண்டும்.
தமிழ்நாடு உயிரியல் பூங்கா ஆணையம், தேசிய மற்றும் சர்வதேச நிறுவனங்களுடன் இணைந்து அறிவியல் மேலாண்மை நடைமுறைகள், சிறந்த பராமரிப்பு, சுகாதாரம் மற்றும் உலகெங்கிலும் உள்ள சிறந்த நடைமுறைகளைத் தெரிந்து கொள்ளும் வகையில் பரிமாற்றத் திட்டங்களை வகுக்க வேண்டும் என்று நான் பரிந்துரைக்க விரும்புகிறேன். உயிரியல் பூங்காக்களுக்கு வரும் பார்வையாளர்களுக்கு ஆரோக்கியமான சூழலை வழங்குவது மட்டுமன்றி, வன உயிரினங்களைப் பாதுகாப்பதன் அவசியம் மற்றும் முக்கியத்துவத்தைப் பற்றியும் அறிந்து கொள்ள இயலும். உயிரியல் பூங்காக்களுக்கு வருகை தரும் வயதானவர்கள், சிறுவர்கள் ஆகியோர்களுக்கு உகந்த வசதிகளை பூங்கா நிர்வாகம் செய்து கொடுக்க வேண்டும் என தனிப்பட்ட முறையில் பூங்கா நிர்வாகத்தை நான் கேட்டுக்கொள்கிறேன். இத்தருணத்தில், உயிரியல் பூங்காவானது மாற்றுத் திறனாளிகள் நலத்துறையுடன் இணைந்து,
* சாய்தளப் பாதைகள்
* சிறப்பாக வடிவமைக்கப்பட்ட ஓய்வு அறைகள்
* மாற்றுத்திறனாளிகளுக்கான வசதியான வாகனங்கள் மற்றும்
* பல்வேறு வகை மாற்றுத் திறனாளிகளுக்காகச் சிறப்பாக வடிவமைக்கப்பட்ட தகவல் சாதனங்கள்
ஆகிய வசதிகளை மாற்றுத்திறனாளிகளுக்காக உருவாக்கும் என்பதை அறிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறேன்.
வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவைத் தவிர, வேலூர் மாவட்டம் அமிர்தியிலும், சேலம் குரும்பப்பட்டியிலும் தமிழ்நாடு அரசு உயிரியல் பூங்காக்களை அமைத்துள்ளது. இந்த உயிரியல் பூங்காக்களில் உள்ள அடிப்படை வசதிகள் மற்றும் உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படும்.
வனவிலங்குகள் மற்றும் வனஉயிரினப் பூங்காக்களில் உள்ள வனவிலங்குகளைப் பாதுகாப்பதில் நாங்கள் ஆழ்ந்த மன உறுதியோடு இருக்கிறோம். இந்த நடவடிக்கைகளில் தொடர்புடைய அனைவரும் முனைப்பான ஒத்துழைப்பை நல்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.