ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் மாநிலம் அனந்த்நாக் மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட ஜமாத்-இ-இஸ்லாமியின் 90 கோடி ரூபாய் மதிப்புள்ள 11 முக்கிய சொத்துக்கள் பறிமுதல் செய்யப் பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
காஷ்மீரில் தடை செய்யப்பட்ட குழு ஜமாத்-இ-இஸ்லாமி மீது, மாநில புலனாய்வு அமைப்பு (எஸ்ஐஏ) எடுத்த அதிரடி நடவடிக்கை காரணமாக, ஜம்மு-காஷ்மீர் முழுவதும் ஜமாத்தின் சுமார் 200 சொத்துக்களை அடையாளம் காணப்பட்டு அவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அதன்படி ₹ 90 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.
இதுதொடர்பாக காஷ்மீர் புலனாய்வுதுறை (எஸ்ஐஏ) வெளியிட்டுள்ள தகவலில், ஜம்மு காஷ்மீரில் பொதுமக்களிடையே அமைதியை நிலைநாட்டும் வகையில், பயங்கரவாதம், பிரிவினைவாதம் மற்றும் பயங்கரவாத நடவடிக்கைகளை ஊக்குவிப்பதாக குற்றம் சாட்டப்பட்ட அமைப்புகள் மீது தொடர்ச்சியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக தடை செய்யப்பட்ட அமைப்பான ஜமாத் இ-இஸ்லாமி அமைப்புக்குச் சொந்தமான 11 சொத்துகளை கண்டறிந்து பறிமுதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், ஜம்மு-காஷ்மீர் அனந்தநாக் மாவட்டத்தில் அந்த அமைப்புக்குச் சொந்தமான ரூ.90 கோடி மதிப்பிலான சொத்துகள் முடக்கப்பட்டுள்ளன. ஜம்மு-காஷ்மீரில் ஜமாத்துக்கு சொந்தமான 200-க்கும் மேற்பட்ட சொத்துகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இந்த மாத தொடக்கத்தில் 2 பள்ளி கட்டடங்கள் உள்பட ஷோபியான் மாவட்டத்தில் அந்த அமைப்புக்குச் சொந்தமான 9 சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டன.
இவ்வாறு எஸ்ஐஏ தெரிவித்துள்ளது.
ஜமாத் இ-இஸ்லாமி என்பது ஜம்மு-காஷ்மீரில் செயல்பட்டு வந்த மிகப்பெரிய அரசியல், மத அமைப்பாகும். தீவிரவாதத்தை ஆதரித்து வந்த தால் இந்த அமைப்பு 2019-ல் தடை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.