கட்சியில் உள்ள வயதான தலைவர்களுக்கு ஓய்வு கொடுக்கும் வகையில், வயது வரம்பை அமல்படுத்த சிபிஐ (எம்) கட்சியின் பொலிட் பீரோ கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டு உள்ளது.
சிபிஎம் கட்சியின் பொலிட்பீரோ கூட்டம் கட்சியின் தலைமையகத்தில் தலைவர் சீத்தாராம் யெச்சூரி தலைமையில் நடைபெற்றது. 3 நாட்கள் நடைபெற்ற இந்த கூட்டத்தில் தமிழக சிபிஎம் தலைவர் ஜி.ராமகிருஷ்ணன் உள்பட நாடு முழுவதும் இருந்து கட்சியின் உயர்மட்டக் குழு நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
இந்த கூட்டத்தில் கட்சியின் வளர்ச்சி, தற்போதைய அரசியல், காஷ்மீர் விவகாரம் போன்றவை குறித்து ஆலோசிக்கப்பட்டது.
மேலும் கட்சிக்கு தீவிர உறுப்பினர் சேர்க்கை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டதுடன், வரும் தேர்தல்களில் புதுமுகங்களுக்கு வாய்ப்பு அளிக்கும் வகையில், மூத்த தலைவர்களுக்கு ஒய்வு கொடுப்பது குறித்து விவாதிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து, தேர்தலில் போட்டியிடுவதற்கு, பாரதிய ஜனதா கட்சியைப் போன்று வயது வரம்பை நிர்ணயம் செய்வது குறித்து முடிவு செய்யப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
புதிய முகங்களைக் கொண்டுவருவதற்கான முயற்சியாக, சிபிஐ (எம்) தனது முடிவெடுக்கும் அமைப்புகளில் மாநிலக் குழுக்களிலிருந்து மத்திய குழுக்களுக்கும், இறுதியில் அரசியல் பணியகத்திற்கும் உறுப்பினர்களுக்கு வயது வரம்பை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது.
இதுதொடர்பாக மாநிலக் குழுக்களின் ஆலோசனை கோரப்பட உள்ளதாகவும், அதைத்தொடர்ந்து விரைவில், இந்த விவகாரத்தில் உறுதியான முன்மொழிவு கொண்டு வரப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.