டில்லி:

காங்கிரஸ் கட்சியுடன் தேர்தல் கூட்டணி வைப்பது குறித்து விரைவில் முடிவு எடுக்கப்படும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்துள்ளது. முன்னதாக ராகுல்காந்தி தலைமையிலான காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி இல்லை என்று மார்கிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறிவித்திருந்தது.

இந்நிலையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சுவரவரம் சுதாகர் ரெட்டி கூறுகையில், ‘‘மதவாத சக்திகளுக்கு எதிராக அனைத்து கட்சிகளும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்பது எங்களது கருத்து. ஆனால், தேர்தல் கூட்டணி என்பது இதில் இருந்து வேறுபட்டதாகும். காங்கிரஸ் கட்சியுடன் தேர்தல் கூட்டணி அமைப்பது குறித்து இன்னும் எந்த முடிவும் எடுக்கவில்லை.

அவர்களுடன் கூட்டணி வைப்பதா? இல்லையா? என்பது குறித்து எவ்வித முடிவும் எடுக்கவில்லை. இது குறித்து விவாதிக்கபப்டும். எங்கள் கட்சியிலும் விவாதிக்கப்படும். மார்க்சிஸ்ட் கட்சியுடனும் விவாதிக்கப்படும். இடதுசாரிகள் ஒற்றுமைக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

இந்த அடிப்படையில் எங்கள் கட்சியிலும், மார்க்சிஸ்ட் கட்சியுடனும் விவாதித்து முடிவு எடுக்கப்படும். இந்தியா முழுவதும் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைப்பது சாத்தியமில்லை. சில மாநிலங்களில் போட்டியிடுவதில்லை என்ற ரீதியில் முடிவு எடுக்கப்படும். ’’ என்றார்.

முன்னதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி கொண்டு வந்த காங்கிரஸ் கட்சியுடனான கூட்டணி குறித்த தீர்மானம் அக்கட்சியின் மத்திய குழுவில் தோல்வி அடைந்தது. பாஜக.வை ஆட்சிக்கு வரவிடாமல் தடுக்கும் வகையில் இந்த தீர்மானம் கொண்டு வரப்பட்டது. ஆனால் பொலிட் ப்யூரோ உறுப்பினர் பிரகாஷ் காரத் தலைமையிலான கேரளா பிரதிநிதிகள் இதை எதிர்த்து வாக்களித்து தோல்வி அடைய செய்தனர்.