திருச்சி: காய்ச்சல் மற்றும் உடல்நல பாதிப்பால் கடந்த இரு வாரங்களாக திருச்சி காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் உடல்நலம் தேறி வீடு திரும்பினார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் உடல் நலம் பாதிக்கப்பட்டு அக்டோபர் 4ஆம் தேதி திருச்சி மிளகு பாறையில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் மேல்சிகிச்சைக்காக திருச்சி காவேரி மருத்துவனைக்கு மாற்றப்பட்டார். அங்கு அவருக்கு கடந்த இரு வாரங்களாக தொடர் சிகிச்சைகள் வழங்கப்பட்டு வந்த நிலையில் வீடு திரும்பினார்.
இதுதொடர்பாக அக்கட்சியின் மாநிலத் துணைச் செயலாளர் பெரியசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், “அன்புமிக்க தோழர்களே, வணக்கம். இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் தோழர் இரா. முத்தரசன், உடல் நலப் பாதிப்பால் கடந்த 04.10.2023 ஆம் தேதி திருச்சி காவேரி மருத்துவ மனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். கடந்த 13 நாட்களாக தீவிர சிகிச்சை பெற்றதில் தோழர் இரா. முத்தரசன் குணமடைந்து நேற்று 18.10.2023 ஆம் தேதி இரவு வீடு திரும்பியுள்ளார் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.
தோழர் இரா. முத்தரசன் அவர்களுக்கு மருத்துவ ரீதியான சிகிச்சை நிறைவடைந்து விட்டது. எனினும் இன்னும் 15 நாட்களுக்கு பார்வையாளர்கள் சந்திப்பை அனுமதிக் கூடாது, மிகுந்த எச்சரிக்கையுடன் மருந்துகள் எடுத்துக் கொண்டு, ஓய்வில் இருக்க வேண்டும் என்பது மருத்துவர்களின் , கண்டிப்பும் நிபந்தனையும் கொண்ட கறாரான அறிவுரையாகும் என்பதை தோழர்கள், நண்பர்கள் என அனைவரின் கவனத்துக்கும் தெரிவித்துக் கொள்கிறோம். (அலைபேசியிலும் தொடர்பு கொள்ள இயலாது) முழு ஓய்வும் அவரது சிகிச்சையின் ஒரு பகுதியாக அமைந்துள்ளது.
தோழர் இரா. முத்தரசன் அவர்களுக்கு சிறந்த சிகிச்சை அளித்த திருச்சி காவேரி மருத்துவமனை நிர்வாகத்துக்கும் மருத்துவர்கள் திரு பார்த்திபன் நடராஜன், சரவணகுமார், செவிலியர்கள், சுகாதாரப் பணியாளர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றியும் பாராட்டுதலையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
திருச்சி மாநகர் வணக்கத்திற்குரிய மேயர் திரு. மு. அன்பழகன் , இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் மத்தியக் கட்டுப்பாட்டுக் குழு உறுப்பினர் தோழர் எம் செல்வராஜ், மாவட்டச் செயலாளர்கள் தோழர் எஸ். சிவா (மாநகர்) எஸ். ராஜ்குமார் (புறநகர்) மாமன்ற உறுப்பினர் க சுரேஷ். இப்ராகிம் சுரேஷ் முத்துசாமி உள்ளிட்ட தோழர்கள் நன்றியினையும் பாராட்டுதல்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்”.
இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.