டில்லி
இந்தியாவில் அனுமதி பெற்றுள்ள கோவிஷீல்ட் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் ஐரோப்பிய யூனியன் நாடுகள் செல்ல சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இந்தியாவில் தற்போது மூன்று கொரோனா தடுப்பூசிகளுக்கு அவசர பயன்பாட்டு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இவை கோவிஷீல்ட், கோவாக்சின் மற்றும் ஸ்புட்னிக் ஆகியவை ஆகும். இதில் கோவிஷீல்ட் மருந்து ஆக்ஸ்ஃபோர்ட் – ஆஸ்டிரா ஜெனிகா நிறுவனம் கண்டுபிடித்து இந்தியாவில் சீரம் இன்ஸ்டிடியூட் உற்பத்தி செய்து வருகிறது.
வரும் ஜூலை 1 முதல் ஐரோப்பிய யூனியன் நாடுகளுக்குச் செல்ல கிரீன் பாஸ் என்னும் நடைமுறை அமலாகிறது. இதன்படி ஐரோப்பாவில் நேரடியாக உற்பத்தியாகும் ஆக்ஸ்ஃபோர்ட்-அஸ்ட்ராஸெனகாவின் வேக்ஸெவ்ரியா, ஃபைஸா் -பயோஎன்டெக்கின் கோமிர்நாட்டி, மாடா்னாவின் ஸ்பைக்வாக்ஸ், ஜான்சன் & ஜான்சனின் ஜான்சென் தடுப்பூசிகளைச் செலுத்திக் கொண்டவர்கள் மட்டுமே ஐரோப்பிய யூனியன் நாடுகளுக்குப் பயணிக்க முடியும்
சீரம் இன்ஸ்டிடியூட் ஐரோப்பிய யூனியன் நாடுகளில் கோவிஷீல்ட் பயன்பாட்டுக்கு இதுவரை விண்ணப்பிக்கவில்லை. எனவே அந்த தடுப்பூசியைப் போட்டுக் கொண்ட இந்தியர்கள் ஐரோப்பிய யூனியன் நாடுகளுக்குச் செல்ல சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதே மருந்து வேக்செர்வியா என்னும் பெயரில் ஐரோப்பிய நாடுகளின் அனுமதி பெற்றுள்ள போதிலும் இந்தியர்கள் ஐரோப்பிய நாடுகள் செல்ல முடியாத நிலை உள்ளது.
தடுப்பூசி நிபுணர் சந்திரகாந்த் லகாரியா, “வேறு வேறு நாடுகளில் உற்பத்தி செய்யப்பட்டாலும் வேக்ஸெவ்ரியா தடுப்பூசியும் கோவிஷீல்ட் தடுப்பூசியும் ஒன்றுதான். ஆயினும் அந்தத் தடுப்பூசிகளுக்கு இடையே பாகுபாடு காட்டப்படுகிறது. இதற்கான விளக்கம் எதுவும் இதுவரை அளிக்கப்படவில்லை. ஐரோப்பிய யூனியனின் நடவடிக்கை பாரபட்சமானது என்று தெரிவித்தார்.
சீரம் இன்ஸ்டிடியூட் தலைமை செயல் அதிகாரி அதார் பூனேவாலா,” இது குறித்து ஐரோப்பிய நாடுகள் மருந்து கட்டுப்பாடு அமைப்புகளுடனும் மற்றும் அரசு அதிகாரிகளிடம் நாங்கள் பேச்சு வார்த்தை நடத்த உள்ளோம். இந்த பிரச்சினைக்கு விரைவில் ஒரு சுமுகமான தீர்வு காணப்படும் என டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.