திருவனந்தபுரம்
கொரோனா தடுப்பூசியான கோவிஷீல்ட் மருந்தை 28 நாட்களில் போடலாம் என கேரள உயர்நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.
இந்தியாவில் மூன்றாம் அலை கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்தியாவில் தடுப்பூசி போடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது மத்திய அரசு கோவிஷீல்ட் மற்றும் கோவாக்சின் மருந்துகளை மொத்தமாக வாங்கி மாநில அரசுகளுக்கு விநியோகம் செய்து வருகிறது. இதில் கோவிஷீல்ட் மருந்துக்கு இரு டோஸ்களுக்கு இடையே 84 நாட்கள் இடைவெளி அறிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு 84 நாட்கள் இடைவெளியில் கொரோனா தடுப்பூசிகள் போடும் போது அதன் திறன் அதிகரிக்கும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. ஆயினும் 84 நாட்கள் தாண்டிய பிறகும் தடுப்பூசி பற்றாக்குறை காரணமாகப் பலர் தடுப்பூசி போட்டுக் கொள்ளாமல் உள்ளனர். மேலும் கொரோனா மூன்றாம் அலை விரைவில் தாக்கலாம் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
இதையொட்டி இந்த இடைவெளியைக் குறைக்க உத்தரவிடுமாறு கேரள உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கொச்சியைச் சேர்ந்த கிடெக்ஸ் கார்மெண்ட் லிமிடெட் என்னும் நிறுவனம் தங்கள் ஊழியர்களுக்கு 84 நாட்கள் இடைவெளிக்குள் தடுப்பூசி போட அனுமதிக்க இந்த வழக்கைப் பதிவு செய்துள்ளது.
இன்று இந்த வழக்கில் கேரள உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது. அதன்படி கோவிஷீல்ட் தடுப்பூசிக்கான இடைவெளி குறைக்கப்பட்டுள்ளது. குறைந்தது 28 நாட்களுக்குப் பிறகு கோவிஷீல்ட் தடுப்பூசியைச் செலுத்தலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மத்திய அரசு அறிவித்துள்ள 84 நாட்கள் இடைவெளி என்னும் நிலைப்பாட்டை நீதிமன்றம் நிராகரித்துள்ளது.