கொரோனா காலக் கூத்துகள் – பாகம் 2
எம்புள்ள படிக்குது
– வழிப்போக்கன்
அன்று நண்பர்கள் கூடும் ஒரு கூட்டத்தினை கடந்து செல்ல முற்பட்டேன், இளசுகள் பேசுகிறார்களே, என்னவாக இருக்கும் என ஆர்வம் மிகுதியால் ஒரு இளநீர் குடிப்பது போல, கையில் இளநீரை வாங்கி வைத்துக்கொண்டு காதை தீட்டிக்கொண்டேன்.
“டேய் மச்சி, நடா, காசு இருந்தால் படிக்கணும், இல்லைனா படிக்கக்கூடாதுடா” என்றான் வருத்தத்துடன்.
“ஆமாண்டா, ஒண்ணாம் வகுப்பு, எங்கப்பன் ஆத்தா வந்து சேத்துவுட்டாங்க, பன்னண்டாவாது முடிக்கறப்பதான் டி.சி. வாங்க வந்தாங்க, அது வரை நோட்டு, புக், பை, சோறு எல்லாமே கெடச்சுதா, நல்லபடியா படிச்சிட்டேன், அப்பனும் அன்னாடங் காய்ச்சி என்னா பண்ணுவாக,ஒண்ணும் சேர்த்து வைக்கல, ஏதோ ஒரு ஆசையில எஞ்சினியரிங் சேர்ந்துட்டேன், காசு கட்ட முடியல, கொரோனா வந்துடிச்சு,சம்பாத்தியமும் இல்ல, இப்ப பரிட்சை முடிஞ்சு, ரிசல்ட்டும் இல்ல, என்னால இனிக் காசு கட்டவும் முடியாது, எஞ்சினியர் ஆவவும் முடியாது.”
“சரிதான்டா மணி, உன் அப்பாவாவது மூட்டை தூக்குறார் ஒரு நாளைக்கு முன்னூறு ரூபா கிடைக்கும், வயிராவது நெரையும், என் அப்பா செப்டிக் டேங்க் லாரில வேலை செய்யறார், சம்பாதிக்கற பணத்தை குடிச்சே அழிச்சுடறார், அதனால நான் இந்த வருஷத்தோட, காலேஜ் நிக்கப் போறேண்டா, என்னாலயும் பணம் கட்ட முடியல, இன்னைக்கு காலைல தான் எங்க மாமா வந்து சொன்னாரு சுடுகாட்டுல முள்ளு, செடிகொடி நெறய வளந்து நிக்குதாம், சுத்தம் செய்யணுமாம் ஒரு நாளைக்கு 500 ரூபாயாம், ஜெ.சி.பி. வண்டி ஓட்டறவன் லீவு அதனால நான் ஜெ.சி.பி. ஓட்டற வேலைக்குப் போறன்டா” என்றான் நடா மணியிடம்.
“டேய் மணி, எனக்கும் இப்ப ஒரு ஐடியா, நம்ம அப்பா அம்மா நம்ம காலேஜ் பீஸ் கட்டறதுக்கே திண்டாடறாங்க, இதுல லேப்டாப், செல்போன்-னு வேற ஆன்லைன் கிளாசுக்கு செலவு, பேசாம நானும் என் செலவப் பார்க்க மூட்டை தூக்கப் போறேண்டா” என்றான் வருத்தத்துடன் ஒருவன்.
உடன், இன்னொருவன் “யார் வேணும்னாலும், எங்க வேணும்னாலும் வேலைக்குப் போங்க, எனக்கு செல்போன் போதும், எப்படியும் வூட்டுல அம்மா சோறு பொங்கி வச்சிருக்கும், இது போதும் நீங்கப் போங்க நான் வரல” என்றான் மற்றவர்களிடம்.
வாங்கிய இளநீர் அமிலமாக இறங்கியது, என்ன இப்படி ஒரு சமுதாய சீரழிவு ? எதிர்காலம் இந்த இளைஞர்களுக்கு எப்படி இருக்குமோ என நினைக்கிறேன்.
எல்லாமே இலவசம் எனும் அரசுகள், கல்வி, மருத்துவம், குடிநீர் ஆகியவற்றை தரமாக வழங்கினாலேப் போதும் அனைத்தும் தானாக மாறும்.
பள்ளியில் இலவசக்கல்வியை தரும் அரசு, கல்லூரியில் காசு கட்ட சொல்வதோடு, காசு காட்டினால் தான் பரிட்சை முடிவை கூட வெளியிட முடியும் என்று சொன்னால், கூலி வேலை செய்வோர், நடைபாதை வியாபாரிகள், கடைநிலைப் பணியாளர்கள் ஆகியோரின் குழந்தைகள் எவ்வாறு கல்லூரிப் படிப்பை படிக்க முடியும் ? எப்படி எஞ்சினியர், டாக்டர் ஆவது ? எல்லாம் கனவாகதான் முடியும் என்பதே நிதர்சனம்.
பி.கு. : எந்த அரசாக இருந்தாலும் இனி இலவசங்களை குறைத்துக் கொண்டால், அது, அரசுக்கு மட்டுமல்ல, எதிர்கால சந்ததியினருக்கும் நல்லது.