லண்டன்: கொரோனா தொற்று தீவிரம் காரணமாக, பிரிட்டன் நாட்டில் ஒரு மாதமாக நடைமுறைப்படுத்தப்பட்டு இருந்த ஊரடங்கு திரும்பப் பெறப்பட்டது. இதையடுத்து, அங்கு கடைகள், ஷாப்பிங் மால்கள் திறக்கப்பட்டன.
கடந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக இங்கிலாந்திலும் ஊரடங்கு அமல்படுத்தப்பபட்டு, பின்னர் தொற்று குறையத்தொடங்கியதும் ஊரடங்கு திரும்பப்பெறப்பட்டது. ஆனால், கொரோனாவின் 2வது அலை கடந்த சில மாதங்களாக பரவத்ரதொடங்கியதும், அங்கு மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. ஏப்ரல் மாதம் வரை இந்த ஊரடங்கு இருக்கும் என்று முதலில் அறிவிக்கப்பட்டது. ஏப்ரல் மாதத்திற்குப் பின் ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்படுமா என்று செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு, தற்போதுள்ள சூழ்நிலையில் ஊரடங்கில் தளர்வுகளை அறிவிக்கும் திட்டம் எதுவும் இல்லை என்று அந்நாட்டின் உள்துறைச் செயலர் ப்ரீத்தி படேல் சமீபத்தில் தெரிவித்தார்.
பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனின் கடும் நடவடிக்கைகளுக்கு தற்போது கை மேல் பலன் கிடைத்துள்ளது. கடுமையான கட்டுப்பாடுகள் எதிரொலியாக பிரிட்டன் முழுவதுமாக கொரோனா தொற்று குறைய தொடங்கியுள்ளது. உயிரிழப்பும் வெகுவாக குறைந்துள்ளது. தொற்று பரலவல் கட்டுக்குள் வந்ததைத் தொடர்ந்து, ஊரடங்கை திரும்ப பெறுவதாக பிரிட்டன் அரசு நேற்று அறிவித்து உள்ளது.
தொற்று கட்டுப்படுத்தப்பட்டு இருந்தாலும் பொது இடங்களில் மக்கள் கொரோனா கட்டுப்பாடுகளை தவறாமல் கடைபிடிக்க வேண்டும் என்று பிரிட்டன் அரசு அறிவுறுத்தியுள்ளது.
இதைத்தொடர்ந்து அங்குள்ள உணவகங்கள், கடைகள், வர்த்தக மையங்கள் திறக்கப்பட்டன. மக்களின் இயல்பு நிலை திரும்பியுள்ளது. மதுபான கூடங்கள், உணவகங்களிலும் மக்கள் கூட்டத்தை அதிகளவு காண முடிகிறது. மக்கள் சமூக இடைவெளியை கடைப்பிடித்து மக்கள் வரிசையில் நின்று பொருட்களை வாங்கி வருகின்றனர் என அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பிரிட்டன் இளவரசர் பிலிப் காலமான நிலையில், அவரது இறுதிச்சடங்கு வரும் 17ந்தேதி நடைபெற உள்ளது. அவரது உடலுக்கு பொதுமக்கள் அஞ்சலி செலுத்தும் வகையில், ஊரடங்கு விலக்கிக்கொள்ளப்பட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது.