டெல்லி: கொரோனா சேவையாற்றும் மருத்துவர்கள், செவிலியர்களுக்கு இலவசமாக விமான பயணம் அளிப்பதாக பிரபல விமான நிறுவனமான விஸ்தாரா அறிவித்து உள்ளது.

கொரோனாவின் 2வது அலையில் சிக்கியுள்ள இந்தியாவில் தொற்று பாதிப்பு மற்றும்  உயிரிழப்புகளுக்கும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.  இதையடுத்து இந்தியாவுக்கு உதவ பல்வேறு நாடுகள் முன்வந்துள்ள நிலையில், பலர் நிதிஉதவியும் அளித்து வருகின்றனர்.

‘இந்த நிலையில்,  பயணிகள் விமான போக்குவரத்து நிறுவனமான  விஸ்தாரா விமான நிறுவனம், கொரோனா சேவையாற்றும் முன்களப் பணியாளர்களுக்கு உதவ முன்வந்துள்ளது.  அதன்படி மருத்துவர்களின் பயண நேர விரயத்தை தவிர்க்க, அவர்களுக்கு இலவச சேவை அளிக்க முடிவுசெய்துள்ளது.

இதுகுறித்து அந்நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,  அரசு மருத்துவமனை உள்பட அரசு சார்ந்த அமைப்புகளின் கீழ் பணியாற்றும் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள், அவசர பணி நிமித்தமான பயணத்திற்கு செல்ல,  நாடு முழுவதும் விஸ்தாரா விமானங்களை இலவசமாக பயன்படுத்திக் கொள்ளலாம்.

இந்த சேவையை பெற விண்ணப்பிப்போருக்கு முன்னுரிமை அடிப்படையிலும், காலியாக மீந்திருக்கும் சீட்களை கணக்கிட்டு அதன் அடிப்படையிலும் சேவை வழங்கப்படும்.

மேலும்,  விமானத்தின் கார்கோ பகுதியில் காலியாக இருக்கும் இடங்களையும் மருத்துவ சேவைக்கு இலவசமாக வழங்கப்படும். அதன்மூலம் மருத்துவ சேவைக்கு தேவையான உபகரணங்கள், மருத்துவ இயந்திரங்கள், ஆக்சிஜங்ன சிலிண்டர்கள் போன்றவற்றை  இந்தியாவின் பல்வேறு பகுதிகளுக்கு கட்டணமின்றி எடுத்து செல்லலாம்.

இவ்வாறு அதில் கூறியுள்ளது.