பெங்களூரு: கொரோனா தடுப்பூசி அனைவருக்கும் இலவசமாக வழங்கப்பட வேண்டும் பிரபல மென்பொருள் நிறுவனத்தின் முன்னாள் தலைவரான இன்போசிஸ் நாராயண மூர்த்தி வலியுறுத்தி உள்ளார்.
கொரோனா தொற்று காரணமாக உலக நாடுகளின் பொருளாதாரம் பெரும் சரிவை சந்தித்துள்ள நிலையில், சமீபத்தில் நடைபெற்ற வெபினார் ஒன்றில் தொழில் தலைவர்கள் மற்றும் நிர்வாகிகளுடன் உரையாடினார். அப்போது லாக்டவுன் சமயத்தில் தொழில் நிறுவனங்களுக்கு ஏற்பட்டுள்ள சரிவு, நஷ்டம் மற்றும் பொருளாதார மந்தநிலை குறித்து விவாதித்ததுடன், கோவிட்-19 தொற்றால் ஏற்படும் இறப்புகள், மற்ற இறப்புகளைக் காட்டிலும் குறைவானதே என்றார். அதனால் மக்கள் பதற்றமடைய வேண்டாம் என்று தெரிவித்ததுடன், ‘இந்தியர்களே வாரம் 60 மணநேரம் பணியாற்றத் தயாராகுங்கள்’ என்றும் அறைகூவல் விடுத்தார்.
இந்த நிலையில் தனியார் ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்த நாராயணமூர்த்தி, கொரோனா தடுப்பூசி நாட்டில் உள்ள அனைவருக்கும் இலவசமாக வழங்கப்பட வேண்டும் என்றார். ஏற்கனவே மத்திய பிரதேசம், தமிழ்நாடு உட்பட இந்தியாவில் பல மாநில அரசுகள் மக்களுக்கு இலவசமாக தடுப்பூசி வழங்குவதாக உறுதியளித்துள்ளன. அதை அனைத்து மாநிலங்களும் பின்பற்ற வேண்டும் என்றும், கொரோனா தடுப்பூசி ஒரு பொது நன்மையாக இருக்க வேண்டும், அனைவருக்கும் இலவசமாக தடுப்பூசி போடப்பட வேண்டும் , மத்தியஅரசு இதை செய்யும் என தான் நம்புகிறேன் என தெரிவித்து உள்ளார்.
“தடுப்பூசி உற்பத்தி செய்யும் அனைத்து நிறுவனங்களுக்கும் ஐ.நா அல்லது தனி நாடுகளால் அவற்றின் செலவுக்கு ஈடுசெய்யப்பட வேண்டும், என்று கூறியவர், அது லாப நோக்கத்திற்காக இருக்கக்கூடாது என்பதையும் தெளிவுபடுத்தினார்.
உலகெங்கிலும் தொற்றுநோய் வெடித்ததிலிருந்தும், வைரஸால் தூண்டப்பட்ட பூட்டுதலிலிருந்தும் வழக்கமாக இருந்த வொர்க் ஃப்ரம் ஹோம் (WFH) பற்றி பேசிய நாராயணமூர்த்தி, இந்த நடவடிக்கை நோய் பரவுவதைக் குறைப்பதற்கான ஒரு தற்காலிக நடவடிக்கையாகவே தான் கருதுவதாக கூறினார்.
நமது நாட்டில் பெரும்பாலான வீடுகள் சிறியவை என்பதை நினைவில் கொள்வோம் என்று கூறியவர், நீங்கள் வேலையில் கவனம் செலுத்தக்கூடிய வீட்டில் ஒரு ஒதுங்கிய இடத்தைப் பெறுவது கடினம்” என்று சுட்டிக்காட்டியவர், பள்ளிகளை மேலும் மூடுவது சரியல்ல, கல்வி நிறுவனங்களை மீண்டும் திறக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.
கொரோனா தடுப்பு தொடர்பாக அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் அரசு எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியவர், அதற்காக பள்ளிகளை மேலும் மூட முடியாது என்பதையும் நினைவுபடுத்தினார்.
கொரோனா தொற்று காரணமாக, இந்தியா பொருளாதார சவால்களை எதிர்கொண்டு வருவதாகவும், இதன் பால துறைகளில் மீட்பு அறிகுறிகள் தென்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.