டில்லி: இந்தியாவில் 16ந்தேதி முதல் பயனர்களுக்கு கொரோனா தடுப்பூசிகள் போடும் பணி தொடங்கப்பட்டுள்ள நிலையில், கடந்த நாளில் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களில் 447 பேருக்கு லேசான பக்கவிளைவு ஏற்பட்டு இருப்பது தெரிய வந்துள்ளது. இதை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் சீரம் நிறுவனத்தின் கோவிஷீல்டு, பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவாக்சின் ஆகிய கொரோனா தடுப்பு மருந்துகளுக்கு மத்தியஅரசு அனுமதி வழங்கியுள்ளது. இதையெடுத்து, முதல்கட்டமாக முன்களப் பணியாளர்களுக்கு தடுப்பூசி போடும் பணி, கடந்த 16ந்தேதி முதல் நடைபெற்று வருகிறது.
கடந்த இரு நாட்களில் மட்டும் (16, 17ந்தேதிகளில்) நாடு முழுவதும 2 லட்சத்து 24 ஆயிரத்து 301 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதில் 16ம் தேதி மட்டும் 2 லட்சத்து 7 ஆயிரத்து 229 பேருக்கும், நேற்று (ஜனவரி 17) 17 ஆயிரத்து 702 பேருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டது.
தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களில் இதுவரை 447 பேருக்கு லேசான பக்கவிளைவு ஏற்பட்டதாகவும், அதில் 3 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட வேண்டிய நிலை தேவைப்பட்டதாகவும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அவர்களுக்கு காய்ச்சல், தலைவலி மற்றும் குமட்டல் ஆகிய பிரச்னைகள் மட்டுமே இருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அதன்படி, டெல்லி (52), மகாராஷ்டிரா (22), மேற்கு வங்கம் (14), ராஜஸ்தான் (21), தெலுங்கானா (11) , மேற்கு வங்கத்தில், 14 பேர் உள்பட 447 பேருக்க பக்க விளைவு இருந்தது கண்டறியப்பட்டது. கொல்கத்தாவில் 35 வயதான ஒரு செவிலியர் ஒருவர் தடுப்பூசிப் போட்டுக்கொண்டதும், மயக்கமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்தியாவின் தற்போதைய கண்காணிப்பு கட்டமைப்பின் மூலம், குறிப்பாக பாரத் பயோடெக்கின் கோவாக்சினின் பாதுகாப்பைச் சுற்றியுள்ள கேள்விகளின் பின்னணியில், பாதகமான எதிர்வினைகள் உன்னிப்பாகக் கண்காணிக்கப்படுகின்றன. இத்தகைய பாதகமான நிகழ்வுகளின் அளவும் தீவிரமும் தடுப்பூசி உந்துதலுக்கான பொது நம்பிக்கையை பெரிதும் பாதிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, இது பல ஆண்டுகளாக நீடிக்கும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.