டெல்லி: கொரோனா தொற்றிலிருந்து குணமடைவோர் விகிதம் 84 சதவிகிதமாக உள்ளது என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சக செயலாளர் ராஜேஷ் பூஷண் இந்த தகவலை வெளியிட்டு உள்ளார். அவர் மேலும் கூறியதாவது:
2 வாரங்களாக சிகிச்சை பெற்று வருவோர் எண்ணிக்கை 10 லட்சத்துக்கும் குறைவாகவே காணப்படுகிறது. அதே நேரத்தில் குணம் பெறுவோர் விகிதம் 84% ஆக உள்ளது. புதியதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்படுபவர்களை விட குணமடைவோரின் எண்ணிக்கை கூடுதலாக இருக்கிறது.
நாடு முழுவதும் சிகிச்சையில் உள்ள77 சதவிகிதத்தினர் மகாராஷ்டிரா, கர்நாடகா, கேரளா, ஆந்திரா, தமிழகம், உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட 10 மாநிலங்களில் உள்ளனர். கொரோனா உயிரிழப்புகளில் 48 சதவிகிதம், 25 மாவட்டங்களில் மட்டுமே நிகழ்ந்துள்ளது.
இந்த 25 மாவட்டங்களில் 15 மாவட்டங்கள் மகாராஷ்டிராவில் உள்ளன. கொரோனா பலிகளை கட்டுப்படுத்துவது குறித்து இந்த மாநிலங்களுடன் மத்திய சுகாதார அமைச்சகம் ஆலோசனை நடத்தி வருகிறது என்று கூறினார்.