டெல்லி
கொரோனா வைரஸ் மனிதரால் உருவாக்கப்பட்டதல்ல என புகழ்பெற்ற வைரலாஜிஸ்ட் இயான் லிப்கின் தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் சீனாவின் ஊஹான் ஆய்வகத்தில் உருவாக்கப்பட்டு உலகம் முழுதும் பரப்பப்பட்டதாக அமெரிக்கா உள்ளிட்ட சில உலக நாடுகளால் கூறப்பட்டு வருகிறது.
இந்நிலையில் கொலம்பியா பல்கலைக் கழக பேராசிரியர் இயான் லிப்கின் இது குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.
“COVID-19 மனிதரால் உருவாக்கப்பட்டதல்ல. அது தொடர்பாக இது வரை எந்தவொரு அடிப்படை ஆதாரமும் கிடைக்கவில்லை.
மேலும் மிகவும் நெருக்கமான மரபியல் மாறுபாடுகள் இவ்வகை வைரஸ்களின் உருவாக்கத்திற்கு காரணமாக அமைகின்றன.
உலகில் பல மில்லியன் வைரஸ்கள் இன்னும் அறியப்படாமல் உள்ளன. கொரோனா வைரஸ் வௌவாலிடம் இருந்து மரபு மாற்றம் பெற்றதற்கான சான்றுகள் கிடைத்துள்ளன.
கசப்பான உண்மை என்னவென்றால் நாம் நிச்சயமாக இன்னொரு பெருந்தொற்றை எதிர்கொள்வோம்.
கொரோனா வைரஸ் மனித வாழ்வில் மக்கள் தொகை, புலம்பெயர்பு, சர்வதேச வணிகம் மற்றும் போக்குவரத்தில் பெரும் தாக்கத்தை செலுத்தி வருகிறது.
நம்மிடம் உள்ள செயற்கை வளங்களை தொலைவில் வைத்துவிட்டு இயற்கை சூழலுடன் உறவாடுவதுதான் தற்போதைய நிலையை மாற்றிக் காட்டும்” எனவும் அவர் தெரிவித்தார்.