டெல்லி:  இந்தியாவில் 201 நாட்களுக்கு பிறகு முதன்முறையாக தினசரி பாதிப்பு 18,795 ஆக பதிவாகி உள்ளது. அதே வேளையில் தொடர்ந்து 93 வது நாளாக தினசரி 50,000 க்கும் குறைவான கொரோனா வைரஸ் வழக்குகள் பதிவாகியுள்ளன என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்து உள்ளது.

கொரோனா தொற்று பரவலை தடுக்கும் வகையில், நாடு முழுவதும் தடுப்பூசிகள் செலுத்தும் பணி மின்னல் வேகத்தில் நடைபெற்று வருகிறது. மேலும், மத்திய, மாநில அரசுகள் எடுத்துவரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக,  தொற்று பரவல் கட்டுக்குள் வந்துள்ளது. நேற்று முன் தினம் 28,326 பேருக்கும், நேற்று 26,041 பேருக்கும் வைரஸ் பாதிப்புகள் பதிவான நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 18,795 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலின் அடிப்படையில், இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 18 ஆயிரத்து 795 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியாகி உள்ளது. (கேரளாவில் மட்டும் 11,699 பேர்) இதன்மூலம் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3,36,97,581 ஆக அதிகரித்துள்ளது.

அதேபோல், தொற்று பாதிப்புகளுக்கு ஒரே நாளில் 179 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை  4,47,373 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து 26,030 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதனால், குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3,29,58,002 ஆக உயர்ந்துள்ளது. இதன்மூலம் குணமடைவோர் விகிதம் 97.81 % ஆக உயர்ந்துள்ளது.

மேலும் நாடுமுழுவதும் கொரோனா தொற்றுக்கு தற்போது 2,92,206 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தியாவில் இதுவரை 87,07,08,636 பேருக்கு (கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 1,02,22,525 பேர்) கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே இந்தியாவில் கொரோனா பாதிப்பை கண்டறிய நேற்று ஒரே நாளில் 13,21,780 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும், இதுவரை மொத்தம் 56,57,30,031 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி.எம்.ஆர்) தெரிவித்துள்ளது.