டெல்லி: கொரோனா தாக்கத்தால் பிரபல ஓலா நிறுவனம் 1400 ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளது.
உலகம் முழுவதும் பரவிய கொரோனாவின் தாக்கம் இன்னும் குறையவில்லை. உலகளவில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 50 லட்சத்தை கடந்துவிட்டது.
கிட்டத்தட்ட 200 நாடுகளில் லட்சக்கணக்கான மக்களின் வாழ்வாதாரத்தை இந்த கொரோனா வைரஸ் பாதித்துள்ளது. பல நிறுவனங்கள் நிதி நெருக்கடியில் சிக்கி, ஊழியர்களை பணிநீக்கம் செய்து வருகின்றன.
பிரபல ஓலா நிறுவனமும் இதன் தாக்கத்தில் இருந்து தப்பவில்லை. கடந்த 2 மாதங்களில் அதன் வருவாய் 95 சதவீதம் குறைந்துள்ளன. அதன் காரணமாக 1400 ஊழியர்களை பணி நீக்கம் செய்ய நிறுவனம் முடிவெடுத்துள்ளது.
நிறுவனத்தின் ஒட்டு மொத்த பணியாளர்களில் இவர்கள் 25 சதவீதம் ஆவர். இது குறித்து சம்பந்தப்பட்ட ஊழியர்களுக்கு இமெயில் மூலம் கடிதம் அனுப்பி உள்ளது. இதுபற்றி தலைமை நிர்வாக அதிகாரி பவிஷ் அகர்வால் கூறி இருப்பதாவது:
நான் எடுத்த கடினமான முடிவு. அதை உங்கள் அனைவருக்கும் தெரியப்படுத்துகிறேன். நிறுவனத்தில் 1,400 ஊழியர்களை விடுவிக்க வேண்டும். கொரோனா நெருக்கடியின் தாக்கம் நீண்ட நாட்களுக்கு இருக்க போகிறது என்று கணிக்கிறோம். இதுவே ஒரு அனுபவமாக எங்களுக்கு இருக்கும். இனி இதற்கு மேலும் எந்த பணிநீக்கமும் இருக்காது என்று நம்புவோம் என்று தெரிவித்துள்ளார்.
வைரஸின் தாக்கத்தால் எங்கள் தொழில்துறைக்கு மிகவும் கடினமாக மாறி இருக்கிறது. கடந்த 2 மாதங்களில் எங்கள் வருவாய் 95 சதவீதம் குறைந்துள்ளது. மிக முக்கியமாக, இந்த நெருக்கடி இந்தியா முழுவதும் உள்ள மில்லியன் கணக்கான எங்கள் ஓட்டுநர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களின் வாழ்வாதாரத்தை பாதித்துள்ளது என்றும் கூறினார்.