டெல்லி: கொரோனா காரணமாக அறிவிக்கப்பட்டுள்ள ஊரடங்கை மேலும் நீட்டிக்குமாறு பிரதமருக்கு பெரும்பாலான ஐஏஎஸ் அதிகாரிகள் கோரிக்கை விடுத்து இருக்கின்றனர்.

பிரதமர் அலுவலகத்திற்கு அளித்த பின்னூட்ட ஆய்வில் 410 ஐஏஎஸ் அதிகாரிகள், தொற்றுநோயைக் கட்டுப்படுத்தும் வரை ஊரடங்கு உத்தரவு இருக்க வேண்டும். சுகாதார உள்கட்டமைப்புக்கான நிதி செலவினங்களை 5-10 டிரில்லியன் டாலர்களாக உயர்த்தும்படி கேட்டுக் கொண்டுள்ளனர்.

ஏழை மக்களுக்கு அத்யாவசிய பொருட்கள் வழங்குவதை உறுதி செய்ய வேண்டும் என்று மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் மற்றும் மாவட்ட ஆட்சியாளர்கள் பிரதமர் அலுவலகத்திற்கு அளித்த பின்னூட்ட ஆய்வில் வலியுறுத்தி உள்ளனர்.

நிர்வாக சீர்திருத்தங்கள் மற்றும் பொதுத்துறை நிர்வாகம், 410 ஐஏஎஸ் அதிகாரிகளிடம் ஒரு கணக்கெடுப்பை நடத்தியது. அதில், அதிகாரிகள் அரசுக்கு பரிந்துரைத்து இருப்பதாவது:

21 நாள் லாக்டவுன் என்பது கொரோனா பாதித்த நபர்களை அடையாளம் காணவும், அவர்களுடன் தொடர்பு கொண்டிருந்த அனைவரையும் தனிமைப்படுத்தவும் பயன்படுத்தப்பட்டது.

தொற்றுநோயைக் கட்டுப்படுத்தும் வரை லாக்டவுன் இருக்க வேண்டும். அதை கடைப்பிடிக்காத எந்தவொரு நிகழ்வுகளையும் கடுமையாகக் கையாள வேண்டும்.

தொற்றுநோய்களின் அச்சுறுத்தலை சமாளிக்க மக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருவதாக எழுபத்தைந்து சதவீதம் பேர் தெரிவித்தனர். லாக்டவுனை மக்கள் அமைதியான முறையில் கையாளுகிறார்கள் என்று 69 சதவீதம் பேர் கருதினர், அதே நேரத்தில் 31 சதவீதம் பேர் மக்கள் பதற்றமாகவும் பீதியுடனும் இருப்பதாக உணர்ந்தனர் என்று அதில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.