கோவிட் 19 எனும் கொரோனா வைரஸ் கடந்த 2019 ம் ஆண்டு டிசம்பரில் சீனாவில் தொடங்கி உலகம் முழுக்க பரவியது.

அப்பொழுது பரவிய கொரோனா வைரஸ் தென் ஆப்ரிக்கா, பிரிட்டன், பிரேசில் ஆகிய நாடுகளில் உருமாற்றம் பெற்று, உருமாறிய புதிய கொரோனாவாக தற்போது உலகம் முழுதும் இரண்டாவது அலையாக வீசி வருகிறது.

முதல் அலைக்கு சீனாவை காரணம் கூறி அவர்களுக்கு உலகம் கதவை மூடியது, அதனால் புதிய உருமாறிய கொரோனா இரண்டாவது அலையில் இருந்து தப்பித்தவர்களாய் முகக்கவசம் கூட இன்றி பெய்ஜிங் நகர வீதிகளில் சீனர்கள் ஹாயாக சுற்றி வருகிறார்கள்.

ஆனால், உலகின் பல்வேறு நாடுகளில் உருமாறிய புதுவகை கொரோனா பல்வேறு தாக்கத்தை ஏற்படுத்தியது, தற்போது இந்தியாவில் இரண்டாவது அலை வேகமெடுத்திருப்பதற்கு இந்த உருமாறிய கொரோனாவே முக்கிய காரணம் என்று சொல்லப்படுகிறது.

இந்நிலையில், இந்தியாவின் பாரத் பையோடெக் தயாரித்து வரும் கோவாக்சின் தடுப்பூசி இந்த புதிய வகை கொரோனாவின் வீரியத்தை கட்டுப்படுத்தி சமன் செய்வதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் (ஐ.சி.எம்.ஆர்.) நடத்திய ஆய்வில் தெரியவந்திருக்கிறது.

பிரிட்டன், பிரேசில் மற்றும் தென் ஆப்ரிக்கா ஆகிய நாடுகளில் உருமாறிய கொரோனா வைரசுக்கு எதிரான கோவாக்சின் செயல்பாடு குறித்து நடத்தப்பட்ட சோதனையில், பிரிட்டன் மற்றும் பிரேசில் வகை வைரசுக்கு எதிராக சிறப்பாக செயலாற்றியதற்கான ஆதாரங்கள் உள்ளதாகவும், தென் ஆப்ரிக்கா வைரசுக்கு எதிரான ஆய்வு தொடர்ந்து நடைபெறுவதாகவும், ஐ.சி.எம்.ஆர்.ரின் தொற்றுநோயியல் பிரிவின் தலைவர் டாக்டர் சமிரன் பாண்டா தெரிவித்துள்ளார்.