நியூயார்க்: ‘கோவக்ஸ்’ திட்டத்தின் கீழ் சீரம் நிறுவனம், அஸ்ட்ராஜெனிகா கொரோனா தடுப்பூசி விநியோகம் மே மாதத்திற்குள் மீண்டும் முழுமையாக தொடங்கும் என்று யுனிசெப் தெரிவித்துள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம், புனேயில் உள்ள சீரம் நிறுவனம், உலகளவில் தடுப்பூசி தயாரிப்பில் முதலிடத்தில் உள்ளது. இந்த நிறுவனம், பிரிட்டனின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் கண்டுபிடித்த, ‘கோவிஷீல்டு’ கொரோனா தடுப்பூசி மருந்து தயாரிப்பில் ஈடுபட்டு வருகிறது.
அமெரிக்காவின், ‘நேவாவேக்ஸ்’ நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசி மருந்தை தயாரிக்கும் உரிமையையும் பெற்றுள்ளது. அதே நேரத்தில் உலகளவில், 145க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு கொரோனா தடுப்பூசி வினியோகிப்பது தொடர்பாக, இந்தியாவின், சீரம் நிறுவனத்துடன் யுனிசெப் ஒப்பந்தம் செய்துள்ளது.
இந் நிலையில் யுனிசெப் அமைப்பின் செய்தி தொடர்பாளர் கூறி உள்ளதாவது: ‘கோவக்ஸ்’ திட்டத்தின் கீழ் சீரம் நிறுவனம், அஸ்ட்ராஜெனிகா கொரோனா தடுப்பூசி வினியோகம் வரும் மே மாதத்துக்குள் முழுமையாக தொடங்கும்.
அதன் பின்னர் தடுப்பூசிகள் அனைத்தும் அந்தந்த நாடுகளுக்கு அனுப்பப்படும். கோவக்ஸ் திட்டத்தின் கீழ் ஏப்ரல் மாதத்திலும் தடுப்பூசிகளை பெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளதா என்பது குறித்து இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது என்று கூறினார்.