வங்கக்கடலில் நிலவி வரும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாக தென்தமிழகத்தில் பல்வேறு இடங்களிலும் இரண்டாவது நாளாக கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது.

திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் பெய்து வரும் கனமழை காரணமாக அணைகள் நிரம்பி தாமிரபரணி உள்ளிட்ட ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவியில் மிக மோசமான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இதில் குற்றாலம் மலையில் காட்டாற்று வெள்ளத்தில் இழுத்துவரப்பட்ட மூன்றுவயது ஆண் யானை அருவி பாறையில் இருந்து விழுந்து உயிரிழந்தது.

இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வெளியாகி அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

32 ஆண்டுகளுக்குப் பிறகு குற்றாலத்தில் மிகவும் மோசமான காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டுள்ளது.

கனமழை காரணமாக ஏற்கனவே தென்காசியில் உள்ள குற்றாலம் அருவிகளில் குளிக்கத் தடை விதிக்கப்பட்டிருப்பதுடன் சுற்றுலா பயணிகளின் வருகைக்கும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.