டில்லி

நிர்பயா பலாத்காரக் கொலைக் குற்றவாளி முகேஷ் குமாரின் புதிய மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

மருத்துவக் கல்லூரி மாணவி நிர்பயா ஓடும் பேருந்தில் பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட வழக்கில் முகேஷ் குமார் சிங், பவன் குப்தா, வினய்குமார் சர்மா, அக்‌ஷய்குமார் சிங் ஆகியோருக்கு தூக்குத் தண்டனை அளிக்கப்பட்டது.  இதையொட்டி இவர்கள் மாறி மாறி மனு மற்றும் மேல் முறையீடு செய்து தங்கள் தண்டனையைத் தள்ளிப்போட்டு வந்தனர்.

அனைத்தும் முடிவடைந்ததால் அவர்கள் தூக்கிலிடப்பட உள்ளனர்.  மீண்டும் தூக்கைத் தாமதப்படுத்தக் குற்றவாளிகளில் ஒருவனான முகேஷ் குமார் சிங் ஒரு புதிய மனுவைத் தாக்கல் செய்தான்.  அந்த மனுவில் தான் குற்றம் நடந்த போது ராஜஸ்தானில் இருந்ததாகவும் காவல்துறையினர் டில்லியில் இல்லாத தன்னை கைது செய்ததாகவும் கூறி இருந்தான்.  அரசு தரப்பு இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தது.

இந்த மனுவை விசாரித்து தள்ளுபடி செய்த நீதிபதி தர்மேந்திர ராணா, “இந்த மனு சிறிதும் உணர்வற்ற நிலையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்பதை நான் மிகுந்த மன வலியுடன் கூறிக் கொள்கிறேன்.  ஒரு சிலர் விஷமத்தனமான சிந்தனையில் தவறாக வாதம் செய்து நீதிமன்ற நேரத்தை வீணடிக்கிறார்கள்.  முகேஷ் குமார் சிங்கின் வழக்கறிஞரின் இத்தகைய செயல்பாடு குறித்து வழக்கறிஞர் சங்கம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என உத்தரவிட்டுள்ளார்.