சென்னை:

போதையில் கார் ஓட்டி விபத்து ஏற்படுத்திய வழக்கில் ஆஜராகாத நடிகர் ஜெய்க்கு சைதாப்பேட்டை நீதிமன்றம் பிடிவாரன்ட் பிறப்பித்துள்ளது.

கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னை அடையாறு மலர் மருத்துவமனை அருகே பாலத்திற்கு கீழ் கார் ஒன்று தாறுமாறாக ஓடி சாலையின் நடுவே உள்ள தடுப்பு சுவரில் மோதி நின்றுவிட்டது. இந்த காரில் இருந்த நடிகர் ஜெய், மற்றொரு நடிகரும் காருக்குள்ளேயே மயக்கத்தில் கிடந்துள்ளனர். இதைப்பார்த்த பொதுமக்கள் அடையாறு போக்குவரத்து புலனாய்வு போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

போக்குவரத்து போலீசார் விரைந்து வந்து காருக்குள் மயங்கி கிடந்த நடிகர் ஜெய்யையும், அவரது நண்பரான இன்னொரு நடிகரையும் தட்டி எழுப்பினர். நடிகர் ஜெய்யும், அவரது நண்பரும் போதையில் இருந்ததாக தெரிகிறது. இதனால் அவர்கள் இருவரையும் போலீசார் அடையாறு போக்குவரத்து போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். போதை தெளிந்த பிறகு அவர்களிடம் போக்குவரத்து போலீசார் விசாரணை நடத்தினார்கள்.

நடிகர் ஜெய் மீது குடிபோதையில் அதிவேகமாக காரை ஓட்டி விபத்தை உண்டாக்கியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், அவர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இந்த வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜராகும்படி நடிகர் ஜெய்க்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஆனால் அவர் ஆஜராகவில்லை. இதனால் சைதாப்பேட்டை நீதிமன்றம் நடிகர் ஜெய்க்கு பிடிவாரன்ட் பிறப்பித்துள்ளது.

[youtube-feed feed=1]