ராசிபுரம் குழந்தைகள் விற்பனை வழக்கில் கைதான ஓய்வு பெற்ற செவிலியர் அமுதா உள்ளிட்ட 11 பேருக்கு, ஜூலை 4ம் தேதி வரை காவலை நீட்டித்து நாமக்கல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நாமக்கல் மாவட்டம், ராசிபுரத்தில் பேரம் பேசி குழந்தைகள் விற்பனை செய்யப்படுவது தொடர்பான ஆடியோ வெளியாகி சமீபத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக சி.பி.சி.ஐ.டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில், வழக்கில் தொடர்புடையவர்களாக கருதப்படும் விருப்ப ஓய்வுபெற்ற செவிலியர் உதவியாளர் அமுதவள்ளி, அவரது கணவர் ரவிச்சந்திரன், நந்தகுமார், ஈரோடு தனியார் ஆஸ்பத்திரி செவிலியர் பர்வீன், ஆம்புலன்ஸ் டிரைவர் முருகேசன், சேலம் சர்க்கார் கொல்லப்பட்டி ஆரம்ப சுகாதார நிலைய செவிலியர் உதவியாளர் சாந்தி, பெங்களூரு அழகுகலை நிபுணர் ரேகா மற்றும் இடைத்தரகர்கள் லீலா, ஹசீனா, அருள்சாமி, செல்வி ஆகிய 11 பேரை, சி.பி.சி.ஐ.டி காவல்துறையினர் கைது செய்யப்பட்டு சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். பின்னர் நீதிமன்றத்தில் 11 பேரும் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், முதலில் 6ம் தேதி வரை அவர்களுக்கு நீதிமன்ற காவல் பிறப்பிக்கப்பட்டிருந்தது. பின்னர் அது 20ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டிருந்தது.

இன்றோடு நீதிமன்ற காவல் காலம் முடிவுற்ற நிலையில், வழக்கு மீண்டும் நாமக்கல் தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கில் தொடர்புடைய அமுதவள்ளி உட்பட 11 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். வழக்கை விசாரித்த நீதிபதி, 11 பேரின் நீதிமன்ற காவலை வரும் ஜூலை 4ம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டார்.