சென்னை

பிரபல நடிகர் விஷால் நீதிபதியை ‘பாஸ்’ என அழைத்ததால் நிதிமன்றம் அவரை கண்டித்துள்ளது.

பிரபல நடிகர் விஷால் நடிப்பதுடன் தான் நடிக்கும் படங்களைத் தானே தயாரித்தும் வருகிறார். அவருடைய விஷால் ஃபிலிம் ஃபேக்டரி நிறுவனத்திற்காக மதுரை அன்பு செழியனிடன் ரூ.21.29 கோடியைப் பெற்று அதை திரும்பச் செலுத்த இயலாத நிலையில் இருந்தார்.

எனவே விஷாலின் நிலைமைக் கண்ட லைகா நிறுவனம் விஷாலின் கடனைச் செலுத்தியது., இக்கடனை அடைக்கும் வரை விஷால் தயாரிப்பில் வெளியாகும் படங்களின் அனைத்து உரிமைகளையும் லைகா நிறுவனத்திற்கே தர வேண்டும் என ஒப்பந்தம் கையெழுத்தானதாகவும் கூறப்படுகிறது.

ஆயினும், விஷால் தயாரித்த வீரமே வாகை சூடும் படத்தின் உரிமையை லைகா நிறுவனத்திடம் கொடுக்காததால் லைகா சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. வழக்கை, நீதிபதி பி.டி.உஷா விசாரித்து வருகிறார். நேற்று (ஆக.1) நீதிமன்றத்தில் ஆஜரான விஷாலிடம் குறுக்கு விசாரணை நடைபெற்றது.

அப்போது, லைகா நிறுவனம் வெற்றுத் தாளில் தன்னிடம் கையெழுத்து வாங்கியதாக விஷால் கூறினார். உடனே நீதிபதி, ‘நீங்கள் போட்ட கையெழுத்தை எப்படி மறுக்க முடியும்? புத்திசாலித்தனமாக பதில் சொல்வதாக நினைக்கிறீர்களா? இது சினிமா படப்பிடிப்பு அல்ல. கவனமாக பதில் சொல்லுங்கள்’ என்றார்.

தொடர்ந்து, ‘சண்டைக்கோழி – 2 படம் வெளியாவதற்கு 10 நாள்கள் முன்பு பணத்தை திருப்பித் தருவதாகச் சொன்னீர்களா? என நீதிபதி கேட்டார். அதற்கு, விஷால் ‘பாஸ்’ என எதோ கூறவந்ததும், ‘பாஸ்’ என்றெல்லாம் சொல்லக் கூடாது. ஆம், இல்லை என்று மட்டுமே சொல்ல வேண்டும் என நீதிபதி கண்டித்துள்ளார், இது நீதிமன்றத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.