சென்னை: புதிய குற்றவியல் சட்டங்களுக்கு எதிராக ஜூலை 8-ம் தேதி நீதிமன்றத்தை புறக்கணிப்பது என சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்க கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத்தின் அவசர பொதுக்குழுக் கூட்டம் நேற்று நடந்தது. இக்கூட்டத்தில் புதிய குற்றவியல் சட்டங்களுக்கு எதிரான வழக்கறிஞர்களின் போராட்டம் குறித்து விவாதிக்கப்பட்டது.

பின்னர், இந்த 3 சட்டங்களையும் மத்திய அரசுதிரும்பப் பெற வேண்டும் என்ற கோரிக்கையுடன் ஜூலை 8-ம் தேதி ஒருநாள் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபடுவது என முடிவு செய்யப்பட்டது.

இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த,  சங்கத்தின் தலைவர் ஜி.மோகனகிருஷ்ணன்,  ஏற்கெனவே பல ஆண்டுகளாக இருந்துவந்த குற்றவியல் சட்டங்களுக்கு மாற்றாக இந்த 3 சட்டங்கள் அமல்படுத்தப்பட்டுள்ளது. ஆனால், இந்த சட்டங்களை அமல்படுத்த வேண்டிய அவசியம்குறித்தோ, இந்தியிலும், சமஸ்கிருதத்திலும் பெயர் மாற்ற வேண்டிய அவசியம் குறித்தோ, வழக்கறிஞர் சங்கங்கள் உட்பட யாருக்கும் மத்திய அரசும் தெரிவிக்கவில்லை.

ஏற்கெனவே, நாடு முழுவதும் 4 கோடிக்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்தச் சூழ்நிலையில், இந்த புதிய சட்டங்களை அமலுக்கு கொண்டுவந்தால், வழக்குகளின் தேக்கம் அதிகரிக்கும்.

எனவே, இந்தச் சட்டங்களை அமல்படுத்தக் கூடாது, நிறுத்தி வைக்க வேண்டும் என்பதுதான் வழக்கறிஞர்களின் ஒட்டுமொத்த கோரிக்கை. இதை வலியுறுத்தி, ஜூலை 8-ம் தேதி (திங்கள்) உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள், நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட உள்ளோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.