மும்பை
வயதான தம்பதிகளுக்கு சூப் கொடுத்து அவர்கள் மயங்கி விழுந்ததும், நகைகள், கடிகாரத்தை எடுத்துக் கொண்டு உடன் பயணம் செய்த இருவர் தலைமறைவானார்கள்.
சஞ்சீவா ஷெட்டி (வயது 61) என்பவரின் மனைவி ரத்னா (வயது 56). ரத்னாவுக்கு நரம்பியல் கோளாறு உள்ளதால் அவரை அழைத்துக் கொண்டு சஞ்சீவா மணிப்பாலில் உள்ள ஒரு மருத்துவமனைக்கு அவரை அழைத்துச் சென்றுள்ளார். இருவரும் மத்ஸ்யகந்தா எக்ஸ்பிரஸ் ரெயிலில் பயணம் செய்துள்ளனர். இது அவர்களின் இரண்டாம் பயணமாகும்.
இருவரும் எஸ் 2 கோச்சில் தாங்கள் பதிவு செய்த இருக்கையில் பயணம் செய்தனர். சஞ்சீவா ரூ 2 லட்சம் மதிப்புள்ள கைக்கடியாரம் அணிந்திருந்தார். ரத்னா நிறைய நகைகள் அணிந்திருந்தார். குர்லா ரெயில் நிலையத்தில் ஏறிய இருவர் அவர்களிடம் ஜன்னல் ஓர சீட்டை கேட்டனர். இவர்களும் அவர்களுக்கு அளித்துவிட்டு நகர்ந்து உட்கார்ந்தனர். நால்வரும் பேசிக் கொண்டு வந்தனர். அப்போது அவர்களில் ஒருவர் தன்னிடம் இருந்த பழரச பாக்கெட் எடுத்து அவர்களை அருந்தச் சொன்னார்.
ஆனால் தங்களுக்கு இவ்வாறு பேக் செய்யப்பட்ட பழரசங்கள் உடலுக்கு ஒத்துக் கொள்ளாது எனக் கூறி மறுத்து விட்டனர். பிறகு அவர் சிறிது சூப் அளித்தார். அது தங்களின் வீட்டில் செய்யப்பட்டது எனவும் உடல்நலத்துக்கு தீங்கானது இல்லை எனவும் கூறினார். சாப்பிட்ட இருவரும் சிறிது நேரத்தில் மயங்கி விழுந்து சுயநினைவை இழந்தனர்.
பிறகு இருவரும் அவர்கள் அணிந்திருந்த நகைகள், கடியாரம் ஆகியவற்றை திருடிக் கொண்டு சாவந்த்வாடி நிலையத்தில் இறங்கி விட்டனர். அந்த பொருட்களின் மொத்த மதிப்பு ரூ.4 லட்சம் ஆகும்.
அதே ரெயிலில் ஏ சி கோச்சில் அவர்களின் உறவினர் ஹரிஷ் ஷெட்டி பயணம் செய்து வந்தார். காலையில் இவர்களைக் காண வந்த போது இவர்கள் சுயநினைவை இழந்து கிடப்பதைக் கண்டு அதிர்ந்த அவர் உடனடியாக ரெயில்வே காவல் ஊழியர்களுக்கு தகவல் அளித்தார். இருவரும் மணிபால் மருத்தவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
சஞ்சீவா இன்னும் மயக்கம் தெளியாமல் இருக்கிறார். ரெயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து அதை அஞ்சானி ரெயில் நிலைய காவல் நிலையத்துக்கு மாற்றியுள்ளனர். மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது.
இதே ரெயிலில் இது போல நான்கு முறை வயதான தம்பதிகளிடம் இதே முறையில் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.