புதுடெல்லி: வான்பாதை நெருக்கடியை தவிர்க்கும் வகையில், ஒரு புதிய வான் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு(ATC) கோபுரம், டெல்லியின் இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் அதிகாரப்பூர்வ செயல்பாட்டிற்கு வந்துள்ளது.
இதன்மூலம் கார்பன் வாயு வெளியேற்றமும் குறைக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த கோபுரத்தின் மூலம், கட்டுப்பாட்டாளர்களுக்கு அழுத்தம் குறைவதோடு, காலதாமதம் ஏற்படுவதிலிருந்து பயணிகளுக்கு நிவாரணம் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கோபுரம் செயல்பாட்டிற்கு வரும் நிகழ்வில் விமானப் போக்குவரத்துத் துறை இணையமைச்சர் ஹர்தீப் சிங் பூரி மற்றும் இந்திய விமான நிலைய ஆணையத்தின் உயரதிகாரிகள் கலந்துகொண்டனர்.
சுமார் ரூ.250 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள இந்த வளாகத்தில், மொத்தம் 3 கட்டடங்கள் அமைந்துள்ளன. ஏரோடிரோம் கட்டுப்பாட்டு கோபுரம், பரப்பு அணுகல் கட்டுப்பாட்டு சேவைகள் கட்டடம் மற்றும் நிர்வாக அலுவலகம் ஆகியவைதான் அந்த கட்டடங்கள்.
மேலும், நவீன வான் போக்குவரத்து அமைப்புகள் மற்றும் நவீன ஆட்டோமேஷன் அமைப்புகளுக்காக ரூ.100 கோடி செலவிடப்பட்டுள்ளது. அதேசமயம், பழைய கோபுரமும் தொடர்ந்து செயல்பாட்டில் இருக்கும். புதிய கோபுரத்தின் செயல்பாடுகளுக்கு உதவிபுரியும் வகையில் அதன் செயல்பாடுகள் அமையும் என்று கூறப்பட்டுள்ளது.
101.9 மீட்டர் உயரத்தில் கட்டப்பட்டிருக்கும் இந்த கோபுரம், நாட்டிலேயே உயரமான வான் போக்குவரத்து கட்டுப்பாட்டு கோபுரமாக திகழ்கிறது. இதில் மொத்தம் 45 பணிநிலையங்கள் உள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.