பாட்னா

மோடிக்கு பதிலாக நாட்டுக்கு நல்ல மற்றும் புதிய தலைமை வர வேண்டும் என பாஜக மக்களவை உறுப்பினர் சத்ருகன் சின்ஹா கூறி உள்ளார்.

பிரபல பாலிவுட் நடிகரான சத்ருகன் சின்ஹா கடந்த 1990 முதல் பாஜகவில் இருந்து வந்தார்.  அவர் வாஜ்பாய் அரசில் அமைச்சரகவும் பணி புரிந்துள்ளார்.  கடந்த சில மாதங்களாக தாம் கட்சித் தலைமையால் ஓரம் கட்டப்படுவதாக கூறி வந்தார்.  இதற்கு காரணம் அமித்ஷா மற்றும் மோடியே காரணம் எனவும் தெரிவித்துள்ளார்.

சத்ருகன் சின்ஹா பாட்னா சாகிப் மக்களவை தொகுதியில் பாஜகவின் உறுப்பினராக தொடர்ந்து தேர்ந்தெடுக்கப்பட்டு வருகிறார்.   தற்போது இவர் பாஜக தலைமையை எதிர்த்து அறிக்கைகள் வெளியிட்டு வருகிறார்.   அத்துடன் மோடியின் பாஜக அரசை குறித்து கடுமையாக விமர்சித்து வருகிறார்.   இவருடைய பாட்னா சாகிப் தொகுதிக்கு இன்னும் பாஜக வேட்பாளரை அறிவிக்கவில்லை.

சமீபத்தில் சத்ருகன் சின்ஹா தனது டிவிட்டரின் தொடர் பதிவுகளில் பிரதமர் மோடியை கடுமையாக தாக்கி உள்ளார்.  அந்த பதிவுகளில், “தற்போது தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.  ஐயா மோடி அவர்களே இனியாவ்து செய்தியாளர் சந்திப்பை நடத்துங்கள்.   இந்த சந்திப்பு ஏற்கனவே ஒத்திகை பார்க்கப்பட்ட நடன நிகழ்வாக இல்லாமல் உண்மையானதாக அமைய வேண்டும்.

எந்த ஒரு கேள்வி பதில் நிகழ்விலும் கலந்துக் கொள்ளாத உங்கள் பெயர் உலக குடியரசு நாடுகளின் பிரதமர்கள் வரலாற்றில் தனி இடம் பெறும்,.   உங்கள் அரசு மாறி வேறு ஒரு நல்ல மற்றும் புதிய தலைமை வரவேண்டும்.   அதற்குள் நீங்கள் ஒரு முறையாவது செய்தியாளர்களிடம் உங்கள் நல்ல மற்றும் கெட்ட செய்கைகள் குறித்து பகிரங்கமாக உரையாற்றலாமே.

கடந்த மாதம் மட்டும் உத்திரப் பிரதேசம்,  காசி மற்றும் நாட்டின் அனைத்து பகுதிகளுக்குமாக 150 புதிய திட்டங்களை அறிவித்துள்ளீர்கள்.   தேர்தல் விதி முறைப்படி இது தவறில்லை.   ஆனால்  இவ்வளவு தாமதமாக அறிவித்தது தவறு.   இருந்தாலும் நீங்கள் லண்டன் மற்றும் டோக்யோ விஜயங்களுக்கு இடையில் இங்கும் கவனம் செலுத்தியதற்கு நன்றி.  ஜெய் ஹிந்த்” என பதிந்துள்ளார்.