டில்லி:
பிரதமர் மோடி, நல்லெண்ண பயணம் மேற்கொண்ட நாடுகள் பல, இந்தியா என்.எஸ்.ஜி.யில் சேர எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இதையடுத்து மத்திய பா.ஜ.க. அரசின் வெளியுறவுக்கொள்கை தோல்வி அடைந்திருப்பதாக அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள்.
அணுசக்தி மூலப்பொருளை விநியோகிக்கும் கூட்டமைப்பான என்.எஸ்.ஜி.யில் இந்தியா உறுப்பினராக்கக் கூடாது என்று சீனா உட்பட பலநாடுகள் தெரிவித்திருக்கின்றன. 48 நாடுகளை உறுப்பினர்களாகக் கொண்ட என்.எஸ்.ஜி.யின் 2 நாள் கூட்டம் தென்கொரியாவின் தலைநகர் சியோலில் தொடங்கியது. இந்த கூட்டமைப்பில் சேர இந்தியா விண்ணப்பித்துள்ளது. இந்தியாவை சேர்த்தால் தங்களையும் உறுப்பினராக்க வேண்டும் என்கிறது பாகிஸ்தான். இந்தியாவுக்கு அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளன.
ஆனால் சீனாவோ இந்தியாவை உறுப்பினராக சேர்க்க முட்டுக்கட்டை போட்டு வருகிறது. அணு ஆயுதப் பரவல் தடை ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திடவில்லை; ஆகையால் விதிகளின்படி இந்தியாவை உறுப்பினராக சேர்க்கக் கூடாது என கூறி வருகிறது.
சீனாவோடு சேர்ந்து துருக்கி, சுவிட்சர்லாந்து, பிரேசில், அயர்லாந்து ஆகிய நாடுகளும் இந்தியாவை சேர்க்கக்கூடாது என்கின்றன. இந்த நாடுகள் அனைத்துக்கும் மோடி நல்லெண்ண பயணம் மேற்கொண்டார். ஒவ்வொரு முறையும், “பயணம் வெற்றி. அந்த நாடு, இந்தியாவுக்கு சாதமான பல முடிவுகளை எடுப்பதாக அறிவித்திருக்கிறது” என்று மத்திய பாஜக அரசும், ஆதரவாளர்களும் செய்தி பரப்பினார்கள்.
ஆனால் இந்த நாடுகள் இந்தியாவுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்திருக்கின்றன.
“அண்டை நாடான நேபாளம் தனது பொருளாதாரம் மற்றும் ராணுவ தேவைகளுக்கு இந்தியாவை சார்ந்து இருந்தது. ஆனால் சமீப காலமாக அந்நாடு சீனாவின் பக்கம் சாய்ந்துள்ளது.
மோடியின் சமீபத்திய அமெரிக்க பயணம் வெற்றி வெற்றி என்றார்கள். ஆனால் இந்தியாவின் சிறப்பு அந்தஸ்து கோரிக்கையை அமெரிக்கா நிராகரித்துவிட்டது.
இலங்கைக்கு பல்வேறு பொருளாதார உதவிகளை இந்தியா செய்து வருகிறது. ஆனால் அந் நாடோ சீனாவின் பக்கம் சாய்ந்திருக்கிறது. சீன முதலீட்டில் பல்வேறு நிறுவனங்கள் இலங்கையில் செயல்பட ஆரம்பித்திருக்கின்றன.
இப்போது மோடி பயணம் மேற்கொண்ட நாடுகள் கூட, என்.எஸ்.ஜி.யில் இந்தியா சேர எதிர்ப்பு தெரிவிக்கின்றன. மொத்தத்தில் பாஜக அரசின் வெளியுறவுக்கொள்கை தோல்வி அடைந்திருக்கிறது என்பதே உண்மை” என்று அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கிறார்கள்.
மோடி அரசின் பயணம்…
கடந்த 2015-2016ம் நிதியாண்டில் பிரதமர் மோடியும், அமைச்சர்களின் பயணச் செலவு 269 கோடி ரூபாயாக இருக்கும் என்று நிதியாண்டின் துவக்கத்தில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் 2015-2016ம் நிதியாண்டில் மோடி மற்றும் அமைச்சர்கள் வெளிநாடுகளுக்கு பயணம் சென்று வந்த வகையில் அரசுக்கு ரூ.567 கோடி செலவாகியுள்ளது. இது முந்தைய ஆண்டை விட 80 சதவீதம் அதிகமாகும்.
இந்த நிலையில் மோடியின் பயணத்துக்காக 2000 கோடியில் தனி விமானம் வாங்கப்படுவதாக செய்தி வெளியாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.