சென்னை: இன்று நடைபெற்ற சென்னை மாநகராட்சி மன்ற கூட்டத்தில், சென்னை பல்கலைக்கழக செனட் உறுப்பினராக கவுன்சிலர் அமுதா தேர்வு செய்யப்பட்டதற்கான சான்றிதழ் வழங்கப்பட்டது.
சென்னை பல்கலைக் கழக ஆட்சிப்பேரவை (செனட்) உறுப்பினர் தேர்தல் மாநகராட்சி மன்றத்தில் இன்று நடந்தது. காலை 9.45 மணிக்கு தமிழ்த்தாய் வாழ்த்துடன் கூட்டம் தொடங்கியது. மாநகராட்சி கமிஷனரும், தேர்தல் அதிகாரியுமான ககன்தீப்சிங்பேடி சென்னை பல்கலைக்கழக ஆட்சிப் பேரவை உறுப்பினர் தேர்தல் குறித்த அறிவிப்பை வெளியிட்டார்.
அதன்படி, பெருநகர மாநகராட்சி மன்றத்தில் இருந்து ஒருவரை ஆட்சிப்பேரவை உறுப்பினராக தேர்வு செய்து அனுப்ப வேண்டும் என்று சென்னை பல்கலைக்கழக பதிவாளர் கடிதம் மூலம் கேட்டதாகவும், அதனைத் தொடர்ந்து தேர்தல் நடத்தப் படுவதாகவும் அவர் தெரிவித்தார். தேர்தலில் போட்டியிடுபவர்கள் இப்போது தாக்கல் செய்ய வேண்டும். அந்த மனுவை ஒருவர் முன் மொழிய மற்றொருவர் வழி மொழிய வேண்டும் என்று அறிவித்தார்.
இதைத்தொடர்ந்து, 68-வது வார்டு கவுன்சிலர் பி.அமுதா வேட்பு மனுவை கமிஷனர் ககன்தீப்சிங்பேடியிடம் தாக்கல் செய்தார். வேறு யாரும் மனுதாக்கல் செய்யாததால் சென்னை பல்கலைக்கழக ஆட்சிப் பேரவை உறுப்பினராக பி.அமுதா போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதாக கமிஷனர் அறிவித்தார்.
இதைத்தொடர்ந்து செனட் உறுப்பினர் அமுதாவுக்கு கமிஷனர் ககன்தீப்சிங்பேடி வாழ்த்து தெரிவித்தார். மேலும் அதற்கான சான்றிதழையும் வழங்கினார். மன்ற உறுப்பினர்கள் அனைவரும் கைதட்டி வாழ்த்துக்களை தெரிவித்தனர்.