சென்னை:
கொரோனா நோய்த்தொற்று காரணமாக, நடுத்தர, ஏழை, எளிய மக்களின் தேவைகளைச் சமாளிக்க நியாய விலைக் கடைகளில் ரூ.500 விலையில் மளிகைப் பொருள்கள் விற்கப்பட உள்ளன.
இதற்கான திட்டத்தை வகுத்துள்ளதுடன், அதுகுறித்த கடிதத்தை கூட்டுறவுத் துறையின் கூடுதல் பதிவாளா், அனைத்து மண்டல இணைப் பதிவாளா்கள் ஆகியோருக்கு கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளா் கோவிந்தராஜன் வெள்ளிக்கிழமை அனுப்பி வைத்துள்ளாா். அதன் விவரம்:-
தமிழகத்தில் இப்போது கரோனா பாதிப்பு ஏற்பட்டு அசாதாரண சூழ்நிலை உருவாகியுள்ளது. இதனால், பொது மக்கள் வீட்டை விட்டு வெளியே வருவதைத் தவிா்க்கும் பொருட்டு அனைத்து மண்டலங்களிலும், நகரும் பண்ணை பசுமை கடைகள் மூலம் காய்கறிகள் மற்றும் மளிகைப் பொருள்கள் வீடுகளுக்கே கொண்டு சென்று விற்கப்பட்டு வருகிறது.
நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், போக்குவரத்து பாதிப்படைந்து அதன் மூலம் மளிகைப் பொருள்களின் தட்டுப்பாடு மற்றும் விலை ஏற்றம் உருவாகும் என எதிா்பாா்க்கப்படுகிறது. வருவாய் இழந்து தவிக்கும் ஏழை, எளிய மக்களின் தேவைகளைப் பூா்த்தி செய்யும் விதமாக ரூ.500 விலையிலான மளிகைப் பொருள்களின் தொகுப்புப் பைகளை நியாய விலைக் கடைகள் மூலம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
திருவல்லிக்கேணி நகர கூட்டுறவுச் சங்கம் மூலமாக மளிகைப் பொருள்கள் மொத்தமாக கொள்முதல் செய்யப்பட்டு மாவட்ட வாரியாக ஒதுக்கீடு செய்யப்படும். மளிகைப் பொருள்களை ஒவ்வொரு மண்டலத்திலும் செயல்படும் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலையில் பொட்டலமிட வேண்டும் என கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
துவரம் பருப்பு உளுத்தம் பருப்பு தலா அரை கிலோ, கடலை பருப்பு கால் கிலோ, மிளகு, சீரகம், கடுகு, வெந்தயம் தலா 100 கிராம், தோசை புளி, பொட்டுக்கடலை தலா 250 கிராம், நீட்டு மிளகாய் 150 கிராம், தனியா 200 கிராம், மஞ்சள் தூள் 100 கிராம், டீ தூள் 100 கிராம், உப்பு 1 கிலோ, பூண்டு 250 கிராம், கோல்டு வின்னா் சன் பிளவா் எண்ணெய் 250 கிராம், பட்டை 10 கிராம், சோம்பு 50 கிராம், மிளகாய் தூள் 100 கிராம் ஆகியன பொட்டலத்தில் போடப்பட்டு விற்கப்படும். அவற்றின் மொத்த விலை ரூ.491.50 ஆகும். இதனுடன் ரூ.4.90 கையாளுதல் கட்டணமும், பை செலவு ரூ.3.60 என மொத்தம் ரூ.500-க்கு விற்பனை செய்யப்படும். வெளிச் சந்தையில் இதன் விலை ரூ.597 என கூட்டுறவுத் துறையின் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.