லஞ்சம் வாங்கியதாக அமலாக்கத்துறை அதிகாரி கைது செய்யப்பட்டது பாஜக ஆட்சியில் மத்திய அரசுத்துறைகளில் ஊழல் மலிந்துவிட்டதையே காட்டுகிறது என்று தமிழக பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தனது X பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
20 லட்சம் ரூபாய் லஞ்சம் வாங்கிய மத்திய அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி கையும் களவுமாக கைது செய்யப்பட்ட நிலையில் மதுரை அமலாக்கத்துறை அலுவலகத்தில் தமிழ்நாடு லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை மேற்கொண்டனர்.
அதேவேளையில், லஞ்ச ஒழிப்புத் துறையிடம் சிக்கிய அங்கித் திவாரி லஞ்சப் பணம் சக அமலாக்கத்துறை அதிகாரிகளுடன் பகிரப்பட்டதாக கொடுத்த தகவலின் அடிப்படையில் சென்னையில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தை லஞ்ச ஒழிப்பு போலீசார் முற்றுகையிட்டுள்ளனர்.
கடந்த சில மாதங்களில் தமிழகத்தைச் சேர்ந்த முக்கிய புள்ளிகள் பலரை அமலாக்கத்துறை விசாரித்துள்ள நிலையில் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தெரியவில்லை. இதனையடுத்து அமலாக்கத்துறை அதிகாரிகள் லஞ்சம் வாங்கியிருக்க வாய்ப்பிருப்பதாக சந்தேகம் வலுத்துள்ளது.
இந்த நிலையில் சென்னையில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் சி.ஆர்.பி.எப். போலீஸ் படையை நிறுத்தி தமிழக லஞ்ச ஒழிப்பு போலீசார் உள்ளே நுழைய முடியாத வகையில் பாதுகாப்பை ஏற்படுத்தியுள்ளது மத்திய அரசு.
லஞ்ச ஒழிப்பு போலீசாரின் முற்றுகையை அடுத்து நேற்றிரவு அமலாக்கத்துறை அலுவலகம் வந்த அதிகாரிகள் இன்று காலை வரை வெளியே வராமல் உள்ளேயே இருந்தனர்.
அமலாக்கத்துறை அதிகாரி கைது செய்யப்பட்ட விவகாரம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் மத்திய அரசை வன்மையாக கண்டித்து வருகின்றனர்.
ED அலுவலர்கள் லஞ்சம், உள்துறை அலுவலகம் ஊழல், சி.ஏ.ஜி. அறிக்கையில் 7.5 லட்சம் கோடி இமாலய ஊழல்.. என்ன இது? BJP – பாரதீய ஜனதா பார்டியா? Bribery Janatha Party யா?#CorruptedBJP_ED #BJP_BriberyJanathaParty#Corrupted_ED #Corruptionkingmodi
— Mano Thangaraj (@Manothangaraj) December 2, 2023
தமிழக பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் வெளியிட்டிருக்கும் பதிவில் மத்திய அரசின் நெடுஞ்சாலைத்துறை, சுகாதாரத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் நடைபெற்றுவரும் ஊழல் சி.ஏ.ஜி. அறிக்கை மூலம் ஏற்கனவே அம்பலமான நிலையில் மத்திய அரசின் ஏவல்துறையாக செயல்பட்டுவரும் அமலாக்கத்துறை அதிகாரி லஞ்சம் பெற்றதாக கையும் களவுமாக சிக்கியிருப்பது மத்திய அரசுத்துறைகள் அனைத்திலும் ஊழல் மலிந்துவிட்டதையே உணர்த்துகிறது என்றும் பாஜக என்பது ப்ரைபரி ஜனதா பார்ட்டி என்றும் காட்டமாக பதிவிட்டுள்ளார்.
இருந்தபோதும், சக அதிகாரிகளுடன் லஞ்சப் பணம் பகிரப்பட்டதாக அங்கித் திவாரி கூறியுள்ள நிலையில் விசாரணைக்கு ஒத்துழைக்காத அமலாக்கத்துறைக்கு சாதகமாக தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
அமலாக்கத்துறை அதிகாரிக்கு 15 நாள் சிறை… ED அலுவலகங்களில் DVAC ரெய்டு தொடரும்…