சென்னை: அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா மீது எழுந்த ஊழல் புகார் காரணமாக, தமிழகஅரசு விசாரணை ஆணையம் அமைத்து, விசாரணை தொடங்கியுள்ள நிலையில், விசாரணையை உடனே நிறுத்த தமிழக முதல்வருக்கு ஆளுனர் பன்வாரிலால் கடிதம் எழுதி உள்ளதாக கூறப்படுகிறது.
அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் சுரப்பா, விதிகளை மீறி அவரது மகள் உள்பட பலருக்கு பணி நியமனம் உள்பட பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது. சுமார் ரூ.280 கோடி ஊழல் செய்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, அவர்மீதான புகார்கள் குறித்து விசாரிக்க நீதிபதி கலையரசன் தலைமையில் விசாரணைக்குழுவை அமைத்தது தமிழக அரசு. மேலும் மூன்று மாதங்களில் இந்த விசாரணைக்குழு அறிக்கை அளிக்கவும் அரசு உத்தரவிட்டது.
இதையடுத்து சூரப்பா மீதான புகார்கள் குறித்து விசாரிக்க விசாரணை ஆணைய நீதிபதி கலையரசன் தொடர்ச்சியாக விசாரணை மேற்கொண்டு வருகிறார். விசாரணைக்கு தேவையான ஆவணங்களை அளிக்காததால், இன்று அண்ணா பல்கலைக்கழக கருணாமூர்த்தி நேரில் ஆஜராக உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், சூரப்பா மீதான விசாரணைக்கு எதிர்ப்புத் தெரிவித்து சுமார் 1 மாதம் கழித்து, கமல்ஹாசன் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். இந்த வீடியோ பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், சூரப்பா மீது விசாரிக்க குழு அமைத்த தமிழகஅரசின் நடவடிக்கைக்கு தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் அதிருப்தி தெரிவித்து கடிதம் எழுதி உள்ளதாக கூறப்படுகிறது. அவர் முதல்வருக்கு எழுதியுள்ள கடிதத்தில் அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா மீதான ஊழல் குற்றச்சாட்டை விசாரிக்க தமிழக அரசு குழு அமைத்தது தனக்கு அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. துணைவேந்தரை விசாரிப்பதற்கான குழுவை தனக்கு தெரியாமல் அமைப்பதுள்ளது தவறான நடவடிக்கையாகும். மேலும் நீதிபதி கலையரசன் தலைமையிலான குழு விசாரணையை உடனே நிறுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
இந்த விவகாரம் தமிழக அரசியல் களத்தில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆளுநரின் உத்தரவுக்கு அரசு அடிபணியுமா? துணிந்து நிற்குமா என்பது விரைவில் தெரிய வரும். சூரப்பா விவகாரத்தில் தமிழக அரசு என்ன முடிவு எடுக்கப் போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்