சென்னை: முன்னாள் அமைச்சர் வேலுமணி எதிராக அறப்போர் இயக்கம் தொடர்ந்த டெண்டர் முறைகேடு வழக்கில் என்று லஞ்ச ஒழிப்பு துறை புலன் விசாரணையை முடித்து 10 வாரங்களில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்தஅதிமுக ஆட்சி காலத்தில் பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்தவர் வேலுமணி. இவர்மீது டெண்டர் முறைகேடு செய்ததாக, அறப்போர் இயக்கம் மற்றும் திமுக அமைப்புச் செயலாளர் ஆர் எஸ் பாரதி தரப்பில் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அமர்வில் விசாரிக்கப்பட்டு வருகிறது. கடந்த விசாரணையின் போது, புகார் தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை எஸ்பி பொன்னி தலைமையில் விசாரணைக் குழுவை நியமித்து முன்னாள் அமைச்சர் வேலுமணிக்கு எதிரான புகார் குறித்து ஆரம்பகட்ட விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டது. அதன்படி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, டெண்டர் முறைகேடு தொடர்பாக முன்னாள் அமைச்சர் வேலுமணி மற்றும் அதிகாரி களுக்கு எதிராக வழக்கு பதிவு செய்து புலன் விசாரணை நடத்தி வருவதாகவும் அரசு தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் தெரிவித்தார்.
வேலுமணி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், முந்தைய ஆட்சியில் நடத்தப்பட்ட ஆரம்பகட்ட விசாரணை அறிக்கை நகலை தங்களுக்கு வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். ஆரம்ப கட்ட விசாரணை அறிக்கையை வழக்கு ஆவணமாக பயன்படுத்தினால் அதை முன்னாள் அமைச்சர் கீழமை நீதிமன்றத்தில் பெற்றுக்கொள்ளலாம் என்றும் தற்போதைய நிலையில் அந்த அறிக்கையை வழங்க முடியாது என்றும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், முன்னாள் அமைச்சர் வேலுமணி எதிராக பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கின் புலன் விசாரணையை முடித்து, 10 வாரங்களில் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்ய வேண்டும் என்று லஞ்ச ஒழிப்புத் துறைக்கு உத்தரவிட்டனர்.
வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்ற கோரிக்கை நிறைவேற்றப்பட்டுள்ளதால் திமுக மற்றும் அறப்போர் இயக்கம் தொடர்ந்த வழக்குகளை முடித்து வைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.