சென்னை: முன்னாள் அமைச்சர் தங்கமணி மீது ஊழல் மற்றும் ரூ.4.85 கோடி அளவில் சொத்துக்குவித்துள்ளதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. இதை யடுத்து, அவருக்கு சொந்தமான 69 இடங்களில் லஞ்ச ஒழிப்பு காவல்துறை ரெய்டு நடத்தி வருகிறது.

கடந்த அதிமுக ஆட்சியில் மின்துறை அமைச்சராக இருந்தவர் தங்கமணி. இவர்மீது ஏற்கனவே திமுக சார்பில் ஊழல் புகார்கள் தெரிவிக்கப்பட்டன. அப்போதைய எதிர்க்கட்சி தலைவராக இருந்த தற்போதைய முதல்வர் ஸ்டாலின், ஆளுநரை பன்வாரிலாலை நேரில் சந்தித்து அ.தி.மு.க அமைச்சர்களின் முறைகேடுகள் குறித்து ஊழல் புகார் பட்டியலை வழங்கி நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி இருந்தார். மேலும், தமிழ்நாடு சட்டமன்ற தேர்லுக்கான பிரச்சாரத்தின் போதும் அ.தி.மு.க அமைச்சர்களின் முறைகேடான சொத்துக்கள் குறித்து தி.மு.க ஆட்சிக்கு வந்தவுடன் விசாரணை நடத்தப்படும் என கூறியிருந்தார்.

அதன்படி, ஆட்சிக்கு வந்ததும், அதிமுக முன்னாள் அமைச்சர்கள் வேலுமணி, சி.விஜயபாஸ்கர், எம்.ஆர். விஜயபாஸ்கர். கே.சி.வீரமணி ஆகியோருக்கு சொந்த மான இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலிஸார் சோதனை நடத்தி வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த நிலையில், இன்று கடந்த முன்னாள் மின்வாரியத்துறை அமைச்சராக இருந்த தங்கமணிக்குச் சொந்தமான சென்னையில் உள்ள 14 இடங்கள் உள்பட நாமக்கல், ஈரோடு மற்றும் கர்நாடகத்தில் ஒரு இடத்திலும், ஆந்திராவில் 2 இடம் என மொத்தம் 69 இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் அதிரடியாகச் சோதனை நடத்தி வருகின்றனர்.

இதை கண்டித்து ரெய்டு நடைபெறும் இடங்களில் அதிமுகவினர் போராட்டம் நடத்துகின்றனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தங்கமணி மீது, நாமக்கல் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக வழக்கு பதிவு செய்துள்ளனர். கடந்த 2016 ஆண்டு முதல் 2020 மார்ச் வரை வருமானத்திற்கு அதிகமாக ரூ.4.85 கோடி அளவிற்குச் சொத்து சேர்த்துள்ளதாக முதல் தகவல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும், அவர் பிட்காயின், கிரிப்டோ நாணயங்களில் முதலீடு செய்துள்ளதாகவும் எஃப்.ஐ.ஆரில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த புகாரில், தங்கமணி முதல் குற்றவாளயிகவும், அவரது மகன் 2வது குற்றவாளியாகவும், மனைவி 3வது குற்றவாளியாகவும் சேர்க்கப்பட்டு உள்ளனர்.
