சென்னை: வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த புகாரில், அதிமுக முன்னாள் அமைச்சர் காமராஜ் மீது லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் 810 குற்றப்பத்திரிகையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளனர்.
முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி தலைமையிலான அதிமுக ஆட்சியின்போது உணவுத்துறை அமைச்சராக இருந்தவர் காமராஜ். இவர் பணியில் இருந்த காலக்கட்டமான 2015 முதல் 2021 -ம் வரையான காலத்தில், வருமானத்துக்கு அதிகமாகச் சொத்து சேர்த்திருப்பதாகப் புகார் எழுந்ததைத் தொடர்ந்து, ஆட்சி மாறியதும், திமுக அரசு அவர் மீது ஊழல் தடுப்பு மற்றும் லஞ்ச ஒழிப்பு காவல்துறை மூலம் நடவடிக்கை எடுத்தது.
இதுதொடர்பாக, காமராஜ் வீடு, அலுவலகம் உட்பட 49 இடங்களில் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் தீவிர சோதனை நடத்தி ஏராளமான ஆவணங்களையும், சொத்து பத்திரங்களையும் கைப்பற்றினர். தொடர்ந்து, முன்னாள் அமைச்சர் காமராஜ், அவரது மகன் உள்பட அவரது குடும்பத்தைச் சேங்ரந்த 6 பேர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து திருவாரூர் மாவட்ட ஊழல் தடுப்பு நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கில், இன்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. ஏற்கனவே நடத்திய ரெய்டின்போது கிடைத்த ஆவணங்களின் அடிப்படையில் முன்னாள் அமைச்சர் காமராஜ், வருமானத்திற்கு அதிகமாக ரூ.127 கோடி சொத்து சேர்த்ருது இருப்பதாக தெரிவித்து, அதுதொடர்பான 810 பக்க குற்றப்பத்திரிகையை திருவாரூர் நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை தாக்கல் செய்தது.
இந்த குற்றப்பத்திரிகையுடன், 18,000 ஆவணங்களும் தாக்கல் செய்யப்பட்டு உள்ளன. அந்த ஆவணங்கள், பெட்டி பெட்டியாக நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.