சென்னை: தமிழகத்தில் நவம்பர் 1-ம் தேதி முதல், வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என்றும், அன்றே பட்டியல் திருத்தும் பணி தொடங்கும் என தமிழ்நாடு தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளார்.
இதுகுறித்து, தேர்தல் ஆணையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், 2022ம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதியை தகுதி நாளாகக் கொண்டு, புகைப்படத்துடன் கூடிய வாக்காளர்பட்டியல் திருத்தும் பணி குறித்த அட்டவணையை இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. அதன்படி வரும் நவம்பர் 1-ம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படுகிறது.
அது தொடர்பான ஏற்புரைகள் மற்றும் மறுப்புரைகளை நவம்பர் 30-ம் தேதி வரை சமர்ப்பிக்கலாம். அவற்றின் மீது டிசம்பர் 20-ம் தேதிக்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இறுதி வாக்காளர் பட்டியல் அடுத்த ஆண்டு ஜனவரி 5-ம் தேதி வெளியிடப்பட உள்ளது.
நவம்பர் 1-ம் தேதி முதல் 30-ம் தேதி வரை அலுவலக வேலை நாட்களில் வாக்குச்சாவடி நிலைய அலுவலர் அல்லது வாக்காளர் பதிவு அலுவலர், உதவி வாக்காளர் பதிவு அலுவலகங்களில் பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்தம் செய்வதற்கான படிவங்களை வழங்கலாம். தொடர்புடைய வாக்குச் சாவடிகளில் சிறப்பு முகாம்களும் நடத்தப்பட உள்ளன.
அடுத்த ஆண்டு ஜனவரி 1-ம் தேதி 18 வயது நிறைவடைந்தவர்களும், வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாதவர்களும் பெயர் சேர்க்க விண்ணப்பிக்கலாம். மேலும், www.nvsp.in என்ற இணையதளம் மூலமாகவும், வாக்காளர் உதவி செயலி (VOTER HELP LINE- Mobile App) மூலமாகவும் விண்ணப்பிக்கலாம். வெளிநாட்டில் வாழும் இந்திய குடிமக்களும் தங்கள் பெயர்களைச் சேர்க்கலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.