சென்னை: தமிழ்நாடு முழுவதும் மழை பெய்து வருவதால், மாநகராட்சி – நகராட்சி ஆணையர்கள், அதிகாரிகள் 24 மணி நேரமும் பணியில் இருக்க வேண்டும் என தமிழக அரசு உத்தர விட்டுள்ளது. மழையால் பாதிப்பு ஏற்படும் பகுதிகளை கண்காணித்து கொண்டே இருக்க வேண்டும் என்றும் கூறியுள்ளது.

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கிய நாள் முதல் மழை கொட்டி வருகிறது. இதையடுத்து, மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையை தமிழ்நாடு அரசு முடுக்கி விட்டுள்ளது. பருவ மழையின்போது அரசுத் துறையினா் எந்த நேரமும் தயாா் நிலையில் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
இந்த நிலையில், தற்போது வங்கக்கடல் மற்றும் அரபிக்கடலில் உருவாகி உள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக சென்னை உள்பட பெரும்பாலான மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இதனால் பொதுமக்கள் அவதியடைந்துள்ளனர். மேலும் சாலைகளிலும் தண்ணீர் தேங்குவதால் பணிக்கு செல்வோர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், பருவமழையை எதிர்கொள்ளும் விதமாக தமிழக அரசின் நகராட்சி நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இது தொடர்பாக மாநகராட்சி மற்றும் நகராட்சி கமிஷனர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், “
அனைத்து மாநகராட்சி-நகராட்சி கமிஷனர்கள் 24 மணி நேரமும் பணியில் இருக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
மேலும், புயல் மழை காரணம், மரம் சாய்ந்ததாக தகவல் வந்தால் உடனடியாக மரத்தை அப்புறப்படுத்த வேண்டும்.
சாலைகளில் தேங்கி நிற்கும் மழைநீரை மிக துரிதமாக அப்புறப்படுத்த வேண்டும்.
ஏற்கனவே மழையால் பாதிப்பு ஏற்படும் பகுதிகளை கண்காணித்து கொண்டே இருக்க வேண்டும்.
கலெக்டர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறைக்கு புகார்கள் குறித்து தகவல்கள் வந்தவுடன் விரைந்து செயல்பட வேண்டும்.
மழையால் பாதிக்கப்படும் மக்களுக்கு உடனடியாக தங்குமிடத்தை ஏற்படுத்தி தர வேண்டும்.
உணவுகள் வழங்க வேண்டும்.
மின்னல் வேகத்தில் நிவாரண முகாம்களை அமைக்க வேண்டும்.
மாநகராட்சி மற்றும் நகராட்சி பகுதிகளில் ஏற்படும் பாதிப்புகளை உடனடியாக தெரிவிக்க நகராட்சி நிர்வாக அலுவலகத்தில் 24 மணி நேர கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டு உள்ளது. அங்கு உடனடியாக தகவல் கொடுக்க வேண்டும்.
வானிலை மைய எச்சரிக்கைகளை கண்காணித்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் எடுக்க வேண்டும் உள்ளிட்ட அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளன. ‘