டில்லி
தற்போது தீபாவளி பரிசாக பல நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களுக்கு சுகாதாரம் மற்றும் உடல்நலம் தொடர்பான பொருட்களை தருகின்றன.
தீபாவளி சமயத்தில் பல நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களுக்கு பரிசளிப்பது வழக்கமான ஒன்று. பல நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களுக்கு விலையுயர்ந்த பொருட்கள், நகைகள், வெள்ளிப் பொருட்கள் ஆகியவைகளை வழங்கி வந்தனர். ஆனால் தற்போது நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களுக்கு தீபாவளி பரிசாக சுகாதாரம் மற்றும் உடல்நலம் தொடர்பான பொருட்களை தந்து வருகின்றன.
ஹரே கிருஷ்ணா எக்ஸ்போர்ட்ஸ் நிறுவனம் வைர வியாபாரம் செய்து வருகிறது. இந்த நிறுவனம் தனது 450 பணியாளர்களையும் குடும்பத்தினருடன் ரிஷிகேஷுக்கு 10 நாட்கள் சுற்றுப்பயணம் தனது செலவில் அனுப்புகிறது. மொத்தம் 700 பேர் இந்த சுற்றுலாவில் கலந்துக் கொள்ள உள்ளனர். ரிஷிகேஷ் இயற்கையான மலை வாழ் தலம் ஆகும்.
இதே நிறுவனம் தனது ஊழியர்களில் ஒருவர் தனது மனைவியில் சாலை விபத்தில் இழந்ததால், பணி புரியும் அனைவரின் மனைவியருக்கும் ஹெல்மெட்டுகள் வழங்கியது.
மற்றொரு நிறுவனமான டுன் & பிராட்ஸ்டிரீட் தனது ஊழியர்களுக்கு செம்பினால் செய்யப்பட்ட குடிநீர் பாட்டில்களையும் கிளாஸ்களையும் அளித்துள்ளது. செம்பினால் செய்யப்பட்ட பாத்திரத்தில் நீர் வைத்து அருந்துவது உடல்நலத்துக்கு மிகவும் நல்லது என அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. அதே நேரத்தில் வேறு சில நிறுவனங்கள் ஆர்கானிக் முறையில் பயிரான அரிசியையும், தானியங்களையும் வழங்கியுள்ளது.
இந்த மாறுதல்களினால் வழக்கமாக தரப்படும் வாழ்த்து அட்டைகள், தேவையற்ற பொருட்கள் அனைத்தும் வழங்கப்படுவது நிறுத்தப்பட்டுள்ளது. இந்த பரிசுகள் வழங்குவது மூலம் ஒவ்வொரு நிறுவனத்துக்கும் ஒரு ஊழியருக்கு ரூ.50000 வரை ஜி எஸ் டி விலக்கு பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.