போபால்: தங்களது அனுமதியின்றி, கொரோனா தடுப்பூசி போடப்பட்டு சோதனை மேற்கொண்டதாக மருத்துவமனை மீது பங்கேற்பாளர்கள் சிலர் குற்றச் சாட்டுக்களை தெரிவித்து உள்ளனர். ஆனால், இதற்கு மருத்துவமமனை நிர்வாகமும், , மக்கள் மருத்துவ அறிவியல் கல்லூரியும் மறுப்பு தெரிவித்து உள்ளது. இது மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மத்திய பிரதேசத்தின் போபால் நகரில் ஒரு கொரோனா வைரஸ் தடுப்பூசி சோதனையில் பங்கேற்ற பலர், தங்களிடம் எந்தவித தகவலும் தெரிவிக்காமல், அனுமதியின்றி கொரோனா தடுப்பூசி சோதனை செய்ததாக குற்றம் சாட்டியுள்ளனர். இந்த தகவலை பிரபல தொலைக்காட்சி ஊடகமான என்டிடிவி வெளியிட்டு உள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
போபாலில் உள்ள பிரபலன தனியார் மருத்துவமனையான மக்கள் மருத்துவ அறிவியல் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் கோரோனா தடுப்பூசி சோதனை நடைபெற்றன. இந்த சோதனையில் பங்கேற்ற பங்கேற்பாளர்கள் பலர், தங்களிடம் சோதனை மற்றும் அதன் அபாயங்கள் குறித்து தங்களுக்கு அறிவிக்கப்படவில்லை என்றும், ஒப்புதல் படிவத்தின் நகல்களும் வழங்கப்படவில்லை என்றும் குற்றம்சாட்டியுள்ளனர்.
கொரோனா தடுப்பூசி சோதனை நடத்துவதற்கு பயனர்களிடம் ஒப்புதல் கடிதம் பெற வேண்டியது கட்டாயம். அப்படி இருக்கும்போது, தடுப்பூசி பங்கேற்பாளர்கள் பலர் தங்களிடம் ஒப்புதல் பெறவில்லை என்று குற்றம் சுமத்தி இருப்பது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
தனியார் மருத்துவமனையான மக்கள் மருத்துவ அறிவியல் கல்லூரி மற்றும் மருத்துவமனையானது, போபால் விஷவாயு தாக்குதல் நடந்த பகுதியில் இருந்து சுமார் அரை கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது. இதன் அருகே உள்ள பகுதிகளான கரீப் நகர், ஒரியா பஸ்தி, சங்கர் நகர் மற்றும் ஜே.பி.நகர் உள்ளிட்ட இந்த பகுதிகளில் வசிப்பவர்களை இந்த மருத்துவமனை அணுகி வருகின்றனர்.
இந்த மருத்துவமனையில் நடத்தப்பட்ட கொரோனா தடுப்பூசி சோதனை தற்போது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தடுப்பூசி சோதனையில் பங்கேற்றவர்களுக்கு ஊசிக்கு ரூ .750 வழங்குவதாக தெரிவிக்கப்பட்டதாகவும், சோதனைகள் நடந்த இடத்திற்கு அழைத்துச் செல்ல வாகனங்கள் அனுப்பப்பட்டதாகவும் அந்த பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
இந்த பகுதி மக்கள் எழுதப்படிக்கத் தெரியாதவர்கள் என்பதால், அவர்களை முறைகேடாக பயன்படுத்தி, மருத்துவமனை நிர்வாகம் தடுப்பூசி சோதனை மேற்கொண்ட தாக குற்றம்சாட்டப்படுகிறது. சோதனை பங்கேற்பாளர்களின் தகவலின்படி, மருத்துவமனை அவர்களின் நாசி, சிறுநீர் மற்றும் இரத்த மாதிரிகள் சேகரித்ததாகக் கூறப்படுகிறது, அதன் பிறகு பங்கேற்பாளர்களுக்கு ஏதேனும் பக்க விளைவுகளைத் தெரிந்துகொள்ள நான்கு பக்க கையேட்டைக் கொடுத்ததாகவும், ஆனால், அதை எங்களில் பலருக்கு படிக்கவோ, எழுதவோ தெரியாது என்று தெரிவித்துள்ளனர். மேலும், இந்த தடுப்பூசியானது இரத்த சம்பந்தப்பட்ட எந்தவொரு பிரச்சினையையும் குணப்படுத்தும் என்று மருத்துவர்கள் சொன்னதாகவும் தெரிவித்து உள்ளனர்.
ஆனால், மருத்துவமனை அனைத்து குற்றச்சாட்டுகளையும் மறுத்துள்ளது. தடுப்பூசி சோதனைகளை நடத்துவது தொடர்பான அனைத்து இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் வழிகாட்டுதல்களையும் அவர்கள் பின்பற்றியதாக மருத்துவமனை கூறியுள்ளது. அவர்களுக்கு தேவையான ஆலோசனை வழங்கப்பட்டதாகவும், சாத்தியமான பக்க விளைவுகள் குறித்து தெரிவிக்கப்பட்டது என்று தெரிவித்து உள்ளது.
இதுதொடர்பாக செய்தி சேனலிடம் விளக்கம் அளித்த மருத்துவமனையின் டீன் டாக்டர் ஏ.கே. தீட்சித் , “அவர்களின் ஒப்புதல், பதிவு செய்யப்பட்டுள்ளது … அதை, அறிக்கை கேட்கும் எவருக்கும் வழங்க நாங்கள் தயாராக இருக்கிறோம் என்று தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து கூறிய மத்திய பிரதேச கல்வி அமைச்சர் விஸ்வாஸ் சாரங், இந்த விவகாரம் குறித்து ஆய்வு செய்யப்படும் என்றும், எவ்வாறாயினும், “துக்டே துக்டே கும்பலை” ஆதரிக்கும் மக்கள் அரசியலில் ஈடுபடுவதாக தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவம் பரபரப்பை எற்படுத்தி உள்ளது.