திருமலை: 

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக பெரும்பாலான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகளவில் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக, திருப்பதியில் பெரும்பாலான சேவைகள் ரத்து செய்யப்பட்டுவதாக திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது. திருப்பதி திருமலை கோயிலின் 1700 ஆண்டு கால வரலாற்றில் முதல் முறையாக இது போன்று பெரும்பாலான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தகது.

உலக நாடுகள் அனைத்தும் இன்று அச்சப்படும் ஒரே விஷயம் என்றால் அது கொரோனா வைரஸ் தான். சீனா, ஈரான், பிரிட்டன், அமெரிக்கா என மொத்தம் 119 உலக நாடுகளை கொரோனா வாட்டி வதைத்து வருகிறது.

இந்தியாவிலும், தலைநகர் டெல்லியில் தொடங்கி கேரள மாநிலம் முடிய, மொத்தம் 73 பேர் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு இதுநாள்வரை ஆளாகியுள்ளனர். கொரோனா வைரஸ் பாதிப்பை தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில், இந்தியாவில் பக்தர்கள் அதிகம் கூடும் வைணவ திருத்தலங்களில் முதன்மையானதாக கருதப்படும் திருப்பதிக்கு சளி, இருமல், காய்ச்சல் அறிகுறிகள் உள்ள பக்தர்கள் வர வேண்டாம் என்று தேவஸ்தான நிர்வாகம் ஏற்கெனவே அறிவித்திருந்தது. இதுமட்டுமின்றி திருப்பதிக்கு வரும் பக்தர்கள் யாருக்காவது சளி, இருமல், காய்ச்சல், தும்மல் ஆகிய பாதிப்புகள் இருப்பது தெரியவந்தால், சம்பந்தப்பட்டவர்களை உடனடியாக மருத்துவ பரிசோதனை செய்யவும், திருப்பதி மலையில் பக்தர்கள் கூடும் முக்கிய இடங்களில் எல்இடி திரைகள் மூலம் கொரோனா வைரஸ் தொற்று ஏற்படாமல் தவிர்க்க தேவையான விழிப்புணர்வு தொடர்பாக ஒளிபரப்பு செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது. அதேபோல் பக்தர்கள் முக கவசம் அணிந்து வரவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இதுமட்டுமின்றி கட்டண தரிசன சேவைகள் அனைத்தும் தற்காலிகமாக ரத்து செய்யப்படுவதாகவும் திருப்பதி தேவஸ்தான நிர்வாகம் அண்மையில் அறிவித்து இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.