சென்னை: கொரோனா வைரசை எதிர்த்து போராடும் மருத்துவ வல்லுநர்கள், சேவைப் பணியாளர்கள் மற்றும் பிற பராமரிப்பாளர்களுக்காக தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்கள், ஆடைகளை தயாரிக்க இந்திய ரயில்வே முடிவு செய்துள்ளது.
கொரோனா வைரஸ் நோயாளிகளுக்காக, ரயில் பெட்டிகள் எல்லாம் மருத்துவமனை வார்டுகளாக மாற்றும் பணிகள் ஒரு பக்கம் நடைபெற்று வருகின்றன. அவ்வாறு மாற்றப்படும் போது அந்த வார்டுகளில் செல்லும் மருத்துவ பணியாளர்களுக்கு அனைத்து பாதுகாப்பு அம்சங்களுடன் கூடிய தனி ஆடை வழங்கப்படுகிறது.
அதற்காக தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்கள் ஆடைகளை தயாரிக்க இந்திய ரயில்வே முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக மண்டல ரயில்வே மற்றும் உற்பத்தி அலகுகளின் அனைத்து முதன்மை தலைமை இயந்திர பொறியாளர்களுக்கு, ரயில்வே நிர்வாகம் ஒரு கடிதம் அனுப்பி உள்ளது.
இந்த ஆடைகளுக்கு பெரும் தேவை இருப்பதால், உபகரணங்களின் உற்பத்திக்கு ரயில்வேயின் உற்பத்தி, பராமரிப்பு உள்கட்டமைப்பு பயன்படுத்தப்படலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வடக்கு ரயில்வே எல்லைக்குட்பட்ட ஆலை ஒன்றில் ஏற்கனவே ஒரு தனிப்பட்ட ஆடை தயாரிக்கப்பட்டது. அதன் வடிவமைப்பு இன்னும் முழுமையாக அங்கீகரிக்கப்படவில்லை. இது தொடர்பாக உற்பத்தியாளர்களுடன் பொறியாளர்கள் கலந்து ஆலோசிப்பர்.
ஒரு மணி நேரத்தில் ஒரு தையல் எந்திரத்தில் இதுபோன்று 3 செட் பாதுகாப்பு ஆடைகள் உற்பத்தி செய்ய வேண்டும் என்பது இலக்காகும் என்று இந்திய ரயில்வே தெரிவித்துள்ளது.