மும்பை:

கொரோனா வைரஸ் பாதிப்பு மும்பையின் பல பகுதிகளில் பரவ தொடங்கி விட்டதாக மும்பை முனிசிபல் கார்ப்பரேசன் தெரிவித்துள்ளது.

மும்பையில் 525 கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் இதில் 34 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா நோயால் உயிரிழந்தவர்களில் 34 பேரில் 11 பேர் மாற்றுத்திறனாளிகள் என்றும் தெரிய வந்துள்ளது. இதற்கு முன்பு இதுபோன்று மாற்று திறனாளிகளுக்கு நோய் பாதிப்பு ஏற்பட்டது இல்லை என்றும் பிஎம்சி தனது அறிக்கையில் கூறியுள்ளது.

மராட்டியத்தில் புதிதாக பாதிக்கப்பட்ட நோயாளிகளில் அதிகப்பட்சமாக மும்பையை சேர்ந்தவர்கள் 116 பேர் ஆவர். புனேயில் 18 பேருக்கும், அகமதுநகரில் 3 பேருக்கும், புல்தானாவில் 2 பேருக்கும், தானேயில் 2 பேருக்கும், நாக்பூரில் 3 பேருக்கும், அவுரங்காபாத்தில் 3 பேருக்கும், சத்தாரா, ரத்னகிரி, சாங்கிலியில் தலா ஒருவருக்கு நோய் பாதிப்பு இருப்பது தெரியவந்துள்ளது.

மாநில தலைநகரான மும்பையில் நேற்று ஒரே நாளில் 116 பேருக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டதன் மூலம் இங்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 606 ஆக அதிகரித்து உள்ளது.

இதேபோல மும்பையில் ஒரேநாளில் கொரோனாவுக்கு 6 பேர் பலியானார்கள். இதன் மூலம் மும்பையில் கொரோனாவுக்கு பலியானவர்கள் எண்ணிக்கை 40 ஆக அதிகரித்து உள்ளது.

இதேபோல மும்பையில் இதுவரை 59 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டு மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பி உள்ளனர்.

இருப்பினும், உள்ளூர் நிர்வாகம் நெருக்கடியை விரைவாக சமாளிப்பதாக மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே கூறியுள்ளார். பி.எம்.சியின் சார்பு நடவடிக்கை காரணமாக, உலகெங்கிலும் உள்ள மற்ற பெருநகரங்களுடன் ஒப்பிடும்போது மும்பையில் குறைவான கொரோனா பாதிப்புகளே இருப்பதாகவும் தெரிய வந்துள்ளது.

மகாராஷ்டிரா சுகாதார அமைச்சர் ராஜேஷ் டோப், தாராவி மற்றும் பிற சேரி பகுதிகளுக்கு சென்று நிலைமையை சரிபார்த்து ஆய்வு செய்துள்ளார். பின்னர், வென்டிலேட்டர்கள் மற்றும் சோதனைகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் அவர் கேட்டு கொண்டுள்ளார்.