சென்னை:
சென்னையில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், நோய்த் தொற்று அதிகரித்து வரும் கோடம்பாக்கம் மண்டலத்தில் சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் நேரில் சென்று ஆய்வு நடத்தினார்.

சென்னையில் மட்டும் 809 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அங்கு, மொத்தம் பாதிப்பு எண்ணிக்கை 16,585 ஆக உயர்ந்துள்ளது. கோடம்பாக்கம் மண்டலத்தில் எம்.ஜி.ஆர் நகரில் உள்ள 138ஆவது வார்டில், நேற்று ஒரே நாளில் 50க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து கோடம்பாக்கம் மண்டலத்தில் 1,921 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
இதனால் அப்பகுதியில் உள்ள அனைத்துக் கடைகளையும் மூட மாநகராட்சி உத்தரவிட்டு, அப்பகுதி முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்று அப்பகுதிக்கு நேரில் சென்ற மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் அங்கு மேற்கொள்ளப்பட்டு வரும் தடுப்புப் பணிகள் குறித்து ஆய்வு செய்தார். அங்கு பணியில் இருந்த மாநகராட்சி அலுவலர்களிடம் கலந்துரையாடிய ஆணையர், பின்னர் ராணி அண்ணா நகர் மற்றும் பிருந்தாவன் டவர்ஸ் பகுதிகளுக்கும் சென்று ஆய்வு மேற்கொண்டார்.
Patrikai.com official YouTube Channel