டெல்லி: இந்தியாவுக்கு பைசர் தடுப்பூசி தேவையில்லை என்று சுகாதார அமைச்சர் ஹர்ஷவர்தன் தெரிவித்து உள்ளார்.

உலககெங்கும் பரவியுள்ள கொரோனா வைரசுக்கு தடுப்பூசியை உருவாக்க உலகின் முன்னணி மருந்து நிறுவனங்கள் தீவிர முயற்சியில் ஈடுபட்டு உள்ளன. 2021ம் ஆண்டு காலாண்டுக்குள் கொரோனா தடுப்பூசி முதல்கட்டமாக பயன்பாட்டுக்கு வந்துவிடும் என்று கூறப்படுகிறது.

இந் நிலையில் கொரோனா தடுப்பூசி குறித்து கருத்து தெரிவித்துள்ள மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன், இந்தியாவுக்கு பைசர் தடுப்பூசி தேவையில்லை என்று கூறி உள்ளார். அவர் மேலும் கூறி இருப்பதாவது:

ஜெர்மனியின் பங்குதாரரான பயோ என்டெக் என்ற மருந்து உற்பத்தியாளருடன், பைசர் நிறுவனம் இணைந்து உருவாக்கப்படும் கொரோனா வைரஸ் தடுப்பூசி இந்தியாவுக்கு தேவையில்லை. பைசருக்கு உரிமம் கூட வழங்கவில்லை.

அனைத்து நாடுகளுடன் தொடர்பில் இருக்கிறோம். பைசர் தடுப்பூசி தேவையில்லை என்று எண்ணுகிறோம். அமெரிக்கா மற்றும் பிற நாடுகளில் தடுப்பூசி தேவைகளை பைசர் பூர்த்தி செய்ய வேண்டும். இப்போது இந்தியாவில் 3 தடுப்பூசிகள் சோதனை கட்டத்தில் உள்ளன. அடுத்தாண்டு பிப்ரவரி அல்லது மார்ச் இறுதிக்குள் அவற்றை அறிமுகப்படுத்த முடியும் என்றார்.