உலக சுகாதார அமைப்பின் தலைமை விஞ்ஞானி சௌமியா சுவாமிநாதன் இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழுக்கு அளித்துள்ள பேட்டியில், இந்தியாவில் கொரோனா அலை இப்போதைக்கு ஓயாது என்று கூறியிருக்கிறார்.
இந்தியாவின் வெவ்வேறு பகுதிகளில் வெவ்வேறு மாதிரியாக நோய் தொற்று பரவல் இருந்து கொண்டே இருக்கும், சில இடங்களில் உயர்வதும் சில இடங்களில் குறைவதுமாக தொடரும் என்று கூறியிருக்கும் அவர் இந்த ஆண்டு ஏப்ரல் – மே மாதங்களில் இரண்டாம் அலையின் போது ஏற்பட்ட பாதிப்பைப் போல் இருக்காது என்று கூறியிருக்கிறார்.
அதே நேரத்தில், மூன்றாவது அலை எப்போது வரும் என்று சரியாக கணிக்க முடியாது என்றும் கூறியிருக்கிறார்.
“மூன்றாவது அலையில் குழந்தைகள் அதிகம் பாதிக்கப்படுவார்கள் என்றபோதும் மோசமாகவோ அல்லது தீவிரமாகவோ அவர்களைத் தாக்க வாய்ப்பில்லை.
இந்தியாவில் தற்போது வரை 9.5 சதவீத மக்களே முழுமையாக தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர், இது 70 அல்லது 75 சதவீதம் அடைந்தால் மட்டுமே தொற்று பரவல் நிலை கட்டுக்குள் வரும், தற்போதுள்ள சூழ்நிலையில் 2022 ம் ஆண்டு இறுதியில் தான் அந்த நிலையை எட்ட முடியும் என்று தோன்றுகிறது” என்று தெரிவித்தார்.
கோவாக்சின் தடுப்பூசிக்கான அங்கீகாரம் இன்னும் வழங்கப்படாதது குறித்த கேள்விக்கு பதிலளித்த சௌமியா சுவாமிநாதன் “பாரத் பயோடெக் நிறுவனம் ஜூலை மாதம் தான் இந்த தடுப்பூசி குறித்த முழுமையான அறிக்கையை சமர்பித்ததாகவும், இது தற்போது பரிசீலனையில் உள்ளதால், வரும் செப்டம்பர் மாத இறுதியில் இதற்கான அங்கீகாரம் கிடைக்கும்” என்று கூறினார்.