நாகை: பிரபலமான வேளாங்கண்ணி ஆலயத்துக்கு பாத யாத்திரை வர தடை விதித்து நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்து உள்ளார்.
நாகையை அடுத்த வேளாங்கண்ணியில் உள்ள, ஆரோக்கிய மாதா தேவாலயத்தில், ஆண்டு திருவிழா ஆகஸ்டு இறுதியில் தொடங்குவது வழக்கம். இந்த திருவிழாவில் கலந்துகொள்ள மாநிலம் முழுவதும் இருநது மாதா பக்தர்கள் நடைபயணமாக வேளாங்கண்ணி வருவர். இதனால் அங்கு லட்சக்கணக்கானோர் கூடி, இறுதியில் தேர்பவனி நடைபெறும்.
கடந்த ஆண்டு முதல் கொரோனா பொதுமுடக்கம் காரணமாக, வழிபாட்டுத்தலங்கள் திறக்க தடை விதிக்கப்பட்டது. இதையடுத்து, பக்தர்கள் இல்லாமல் திருவிழாக்கள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில், நடப்பாண்டும் வேளாங்கண்ணி மாதா திருவிழாவில் பங்கேற்கும் வகையில் ஏராளமானோர் பாதயாத்திரை செல்ல திட்டமிட்டு வருகின்றனர்.
ஆனால், கொரோனா 3வது அலை மீண்டும் பரவும் வாய்ப்பு உள்ளதால், மக்கள் கூடுவதை தடுக்க பல்வேறு கட்டுப்பாடுகளை தமிழ்நாடு அரசு அறிவித்து உள்ளது. ஏற்கனவே ஆடிக்கிருத்திகை, ஆடிப்பெருக்கு விழாக்களுக்கு தடை விதிக்கப்பட்ட நிலையில், தற்போது வேளாங்கண்ணி கோவில் திருவிழாவிலும் மக்கள் கூட தடை விதிக்கப்பட்டு உள்ளது. அதைத்தொடர்ந்து, வேளாங்கண்ணிக்கு பக்தர்கள் பாத யாத்திரை மூலம் வரவும் மாவட்ட ஆட்சியர் தடை விதித்துள்ளார்.