புதுடெல்லி:
துவரை இல்லாத அளவில் கடந்த 24 மணிநேரத்தில் இந்தியாவில் புதிய கொரோனா பாதிப்பு 7 ஆயிரத்து 466-ஆக உயர்ந்துள்ளது.

இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. வைரஸ் பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. கொரோனா அறிகுறி உள்ளவர்களை தனிமைப்படுத்தி சிகிச்சை அளித்தல் உள்ளிட்ட பல்வேறு நோய்த்தடுப்பு நடவடிக்கைகளும் தீவிரமாக நடைபெறுகின்றன. எனினும் நாடு முழுவதும் பரிசோதனைகளை அதிகரிப்பதால் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து உயர்கிறது. அதேசமயம் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை உயர்ந்து வருவது ஆறுதல் அளிப்பதாக உள்ளது.

இந்நிலையில் இன்று காலை மத்திய சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலின்படி, இந்தியாவில் மொத்தம் 165799 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை அமைக்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 7 ஆயிரத்து 466 பேர் கொரோனா பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். மேலும் கொரோனா பாதிப்புக்குள்ளாகி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 175-ஆக பதிவாகியுள்ளது.

இந்தியாவில் மொத்த கொரோனா பாதிப்பு ஒரு லட்சத்து 65 ஆயிரத்து 799 ஆக பதிவாகியுள்ளது. இந்த எண்ணிக்கை கொரோனா பாதிப்புக்குள்ளாகி சிகிச்சை பெறும் 89 ஆயிரத்து 987 பேர் மற்றும் உயிரிழந்த 4 ஆயிரத்து 706 பேரை உள்ளடக்கியது. நேற்று மட்டும் 3414 பேர் கொரோனாவில் இருந்து மீண்டு வீடு திரும்பி உள்ளனர் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.